தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 நாள்களில் மட்டும் 1.42 கோடி பெண்கள் இலவசப் பயணம் - ராஜகண்ணப்பன் - Minister of Transport Rajakannappan

முதலமைச்சர் அறிவித்த, மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்தின் வாயிலாக, கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 1.42 கோடி பெண்கள் இலவசமாகப் பயணம் செய்துள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அரசுப் பேருந்துகள்
அரசுப் பேருந்துகள்

By

Published : Jul 17, 2021, 9:46 PM IST

Updated : Jul 17, 2021, 9:58 PM IST

சென்னை: நங்கநல்லுார், அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையங்களில், 12 புதிய மற்றும் பழைய வழித்தடங்களில், ஏழு மாநகரப் பேருந்துகள் / சிற்றுந்துகள் இயக்கத்தினை, ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தார்.

  • 52K
  • 7ON
  • M18C
  • 576
  • S40
  • 166
  • 88C

உள்ளிட்ட புதிய, பழைய வழித்தடங்களை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர். மொத்தம், 12 வழித்தடங்களில், 17 மாநகரப் பேருந்துகள், சிற்றுந்துகள் இயக்கத்தினையும் தொடங்கிவைத்தார்கள். பின்பு, தா.மோ. அன்பரசன் பேசுகையில், "கடந்த ஆட்சியில், இழப்பைக் காரணம்காட்டி ஆலந்தூர் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், இரண்டு நாள்களுக்கு முன்பு போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் நான் கோரிக்கைவைத்த உடனேயே, 12 வழித்தடங்களில் 17 பேருந்துகளை நங்கநல்லூர், அய்யப்பன்தாங்கல் பகுதிகளில் இயக்க உத்தரவிட்டார்.

நவீனமுறையில் அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம்

மேலும், அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையமானது, 1995ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. என்னுடைய சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியிலிருந்து, ஒரு கோடி ரூபாய் வழங்கத் தயாராக இருக்கிறேன்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் இந்நிதியைப் பெற்றுக் கொண்டு அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தினை நவீன முறையில் புதுப்பித்துத் தருமாறு கோரிக்கைவைக்கிறேன்" என்று கேட்டுக்கொண்டார்.

ராஜகண்ணப்பன்

அவரைத் தொடர்ந்து பேசிய ராஜகண்ணப்பன், "ஊரகத் தொழில் துறை அமைச்சர் அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தினை நவீன முறையில் புதுப்பித்து தரக்கோரி, சட்டப்பேரவை மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1.42 கோடி பெண்கள் இலவசப் பயணம்

அவரின் கோரிக்கையை ஏற்று, போக்குவரத்துத் துறை மூலமாக ஆய்வுசெய்து, அறிக்கைத் தயார்செய்து கூடுதலாக ஆகும் தொகையினை ஏற்று, பொதுமக்களுக்கு வசதியான நவீனமான முறையில் பேருந்து நிலையம் அமைத்துத் தரப்படும்.

பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட வழித்தடங்களிலும், புதிய வழித்தடங்களிலும் பேருந்துகள் இன்று இயக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும், பொதுமக்களின் நலன்கருதி பேருந்துகள் இயக்கப்படும்.

முதலமைச்சர் அறிவித்த, மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்தின் வாயிலாக, கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 1.42 கோடி பெண்கள் இலவசமாகப் பயணம் செய்துள்ளனர். இன்று மட்டும் 29 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர்.

படிப்படியாகக் கூடுதல் பேருந்துகள்

தமிழ்நாடு முழுவதும், நாள்தோறும் 7,291 சாதராணக் கட்டணப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 40 விழுக்காடு பெண்கள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 60 விழுக்காடு பெண்கள் நாள்தோறும் பயணம் செய்கின்றனர். மேலும், 1.10 லட்சம் மாற்றுத்திறனாளிகளும், 17,500 திருநங்கையரும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் மாதம் 2,000 ரூபாய் வரை அவர்களுக்குச் சேமிப்பாகிறது. தமிழ்நாடு முழுவதும் 80 விழுக்காடு அதாவது, 15 ஆயிரத்து 255 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகின்றன. ஊரடங்குத் தளர்வுகளின் அடிப்படையில், படிப்படியாகக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்" என்றார்.

இந்நிகழ்வின்போது, திமுக மக்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி, மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம், உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயார் - அமைச்சர் மா.சு.

Last Updated : Jul 17, 2021, 9:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details