தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமானநிலையத்தில் ரூ.1.17 கோடி மதிப்புடைய வெளிநாட்டுப்பணம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் சுங்க அலுவலர்கள் அடுத்தடுத்து நடத்திய சோதனையில் 2 விமான பயணிகளிடம் இருந்து துபாய் மற்றும் சார்ஜாவுக்கு கடத்த முயன்ற ரூ.1.17 கோடி (ஒரு கோடி 17 லட்சம்) வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.1.17 கோடி மதிப்புடைய வெளிநாட்டு பணம் சென்னை விமானநிலையத்தில்- பறிமுதல்..!
ரூ.1.17 கோடி மதிப்புடைய வெளிநாட்டு பணம் சென்னை விமானநிலையத்தில்- பறிமுதல்..!

By

Published : Jun 6, 2022, 7:52 PM IST

சென்னை: சென்னையிலிருந்து சார்ஜா செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று(ஜூன்05) நள்ளிரவு சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை, விமான நிலைய சுங்கத்துறையினர் கண்காணித்து சோதனை செய்து அனுப்பினர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த 28 வயது ஆண் பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். இதையடுத்து அவர் எடுத்துச்சென்ற டிராவல் பேக்கை திறந்து பார்த்து சோதித்தனா். அதனுள் ரகசிய அறை வைத்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த ரகசிய அறையை பிரித்துப் பார்த்தபோது, அதனுள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் கரன்சி மறைத்து வைத்திருந்தது. இந்திய மதிப்பிற்கு ரூபாய் 97.46 லட்சம் மதிப்புள்ள, அமெரிக்க டாலர் கரன்சி இருந்ததைக் கண்டுபிடித்து, அதைப் பறிமுதல் செய்தனர். அந்த பயணியையும் கைது செய்தனர். அந்த பயணியிடம் சுங்கத்துறையினர் நடத்திய விசாரணையில், அவரோடு சேர்ந்த மற்றொருவர் துபாய்க்கு இதைப்போல் வெளிநாட்டு பணத்தை கடத்தும் தகவல் தெரிந்தது.

இதையடுத்து இன்று(ஜூன்06) காலை சென்னையில் இருந்து துபாய்க்குப் புறப்படத் தயாராக இருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 24 வயது ஆண் பயணி ஒருவரின் பையை சோதனையிட்டனா். அதில் ரகசிய அறையில் மறைத்து வைத்திருந்த ரூபாய் 19.68 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மற்றும் வெளிநாட்டுப் பணத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சுங்க அலுவலர்கள் அவரையும் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க அலுவலர்கள் அடுத்தடுத்து நடத்திய சோதனையில் 2 விமானப்பயணிகளிடம் இருந்து துபாய் மற்றும் சார்ஜாவுக்கு கடத்த முயன்ற ரூ.1.17 கோடி (ஒரு கோடி 17 லட்சம்) வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்தப் பணம் அனைத்தும் ஹவாலா பணம் என்று தெரியவந்தது. கணக்கில் இல்லாத இந்த ஹவாலா பணத்தை யாரோ ஒரு நபர் இவர்களிடம் கொடுத்து வெளிநாட்டுக்கு கடத்துகிறார் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து சுங்க அலுவலர்கள் கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இந்த ஹவாலா பணத்திற்கு சொந்தக்காரர் யார்? என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ’ஒரு கோடியே 17 லட்சம் ஹவாலா பணம்’ பிடிபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஹஜ் யாத்திரை:முதல் விமானம் 377 பயணிகளுடன் கொச்சியிலிருந்து கிளம்பியது

ABOUT THE AUTHOR

...view details