சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம்போல, நேற்று (நவ.9) காலை செங்கல்பட்டு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனிடையே சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலின் குறிப்பிட்ட ஒரு பெட்டியில் பயணம் செய்யும் நபர் ஒருவரின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமான வகையில் உள்ளதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில், உதவி ஆய்வாளர் தேசி, ரயில்வே குற்றத்தடுப்பு மற்றும் கண்டுபிடிப்பு படையினர் ஆகியோர், சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலின் குறிப்பிட்ட அந்த ரயில் பெட்டியை சோதனையிட்டுள்ளனர்.
அப்போது, அந்தப் பெட்டியில் பாதுகாப்பு படையினரைக் கண்டதும் குறிப்பிட்ட ஒரு நபர் பதற்றம் அடைந்துள்ளார். எனவே சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் அந்தப் பையில் எந்த ஆவணமுமின்றி 10 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.