செங்கல்பட்டு: கோவளத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 27). இவர் அலைச் சறுக்குப் போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைப் பெற்று உள்ளார். அலைச் சறுக்கு விளையாட்டுப் பயிற்சியாளராக இருந்து வருகிறார். சிறுவயது முதலே மலையேற்றத்தின் மீது ஆர்வம் கொண்ட இவருக்கு, எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பது பெரும் கனவாக இருந்து வந்துள்ளது.
இதற்காக கடந்த ஒராண்டு காலமாக மலையேற்றப் பயற்சியை மேற்கொண்டு வந்து உள்ளார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் போது கடுமையான பனி, குளிர் போன்ற இடர்களை எதிர் கொண்டு செல்ல வேண்டும். இதற்காக இவர் மணாலி, சோலாங் உள்ளிட்ட குளிர் நிறைந்த மலைகளில் தொடர்ந்து மலையேறும் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
கடுமையான பயற்சிகளுக்குப் பிறகு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்குத் தயாரான ராஜசேகர், கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கி சுமார் 8,850 மீட்டர் உயரத்தை மே 19 ஆம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில் வெற்றிகரமாக எட்டிப் பிடித்து சாதனை புரிந்தார். ஒரு மாத காலம் கடுமையான குளிர் உள்ளிட்ட பல தடைகளைத் தாண்டி விடாமுயற்சியுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி,
அதன் பின்னர் பேஸ்கேம்ப் எனப்படும் அடிவாரத்துக்குப் பாதுகாப்பாக திரும்பி உள்ளார். இதற்கு முன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஊட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார் என்பவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழர் என்ற சாதனையைப் படைத்தார். அவரைத் தொடர்ந்து எவரெஸ்ட்டின் உச்சியை எட்டிப் பிடித்து சாதனை படைத்த இரண்டாவது தமிழர் என்ற பெருமையை பெற்று உள்ளார் இந்த இளம் சாதனையாளர்.