தாம்பரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் பெண்கள் விடுதி:பணிகளை பார்வையிட்ட அமைச்சர் கீதாஜீவன் உறுதி! சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சானிடோரியத்தில் பெண்கள் தங்கும் விதமாக, நவீன வசதிகளுடன் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 424 பெண்கள் தங்கும் விதமாக உருவாகும் மகளிர் விடுதி கட்டடங்களின் இறுதிகட்டப் பணிகளை சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மற்றும் தாம்பரம் மேயர் வசந்த குமாரி ஆகியோர் இன்று(ஆகஸ்ட் 1) நேரில் பார்வையிட்டனர்.
அரசு கட்டுப்பாட்டின்கீழ் புதிதாக அமையவிருக்கும் மகளிர் விடுதிகளில், அமைக்கப்படும் தங்கும் அறைகள், நவீன சமையலறை, யோகா மற்றும் பல பயன்பாடு அரங்கு, இணையதளம் உள்ளிட்டப் பல்வேறு வசதிகள், இது மட்டுமின்றி கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான தனிக் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட பணிகளை அமைச்சர் கீதாஜீவன் கேட்டு உறுதிபடுத்தினார்.
இதையும் படிங்க:பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமின்: காவல்துறையின் கஸ்டடி மனுவுக்கு முகாந்திரம் இல்லை என உத்தரவிட்ட நீதிமன்றம்
அதனையடுத்து மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சியாக கணினி மற்றும் தையல் பயிற்சிகள் அளிக்கப்படும் நிலையில் அதற்கான வகுப்புகளையும் அமைச்சர் துவக்கிவைத்தார். கட்டடப்பணிகளின் ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான வழிகாட்டுதலின் பேரில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை திறம்பட செயல்பட்டு வருகிறது.
இந்த துறை மூலம் பணி செய்யும் பெண்கள், பயிற்சி வகுப்புகளுக்கு வருபவர்கள், படிப்பு, உள்ளிட்டப் பல்வேறு காரணங்களுக்காக நகரங்களில் தங்குவதற்கு வசதியாகவும் பாதுகாப்பு அளித்திடும் வகையிலும் மகளிர் தங்கும் விடுதிகள் புதிதாக பல்வேறு அம்சங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும் பழைய விடுதிகளையும் மேம்படுத்தும் பணியும் தொடர்ந்து செய்து வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையம் அருகில் உள்ள இந்த விடுதி 18 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு மாடி கட்டடமாக, 424 மகளிர்கள் தங்கும் விதமாக அமைக்கப்படுகிறது. அதன் இறுதிகட்ட பணிகளைப் பார்வையிட்டுள்ளோம். முதலமைச்சர் அடுத்த மாதம் இந்த மகளிர் விடுதியைத் திறக்கவுள்ளார். மேலும் தற்போது கட்டப்பட்டு வரும் இந்த விடுதிகளில் அதிநவீன வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கழிப்பிட வசதிகளுடன் அமைத்துள்ளோம்.
அதுபோல் காஞ்சிபுரம், ஐ.டி கம்பெனிகள் அதிகம் உள்ள ஓ.எம்.ஆர் சாலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாநகரங்களில் புதியதாக மகளிர் விடுதிகள் அமைக்கப்படும். இதுவரை 2 ஆண்டுகளில் கூடுதலாக 2 ஆயிரம் மகளிர்கள் தங்கும் விதமாக மகளிர் விடுதிகள் அதிகரித்துள்ளன” எனத் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க:எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் மாணவர்களின் கற்றல் பணி பாதிப்பு - டிட்டோஜாக் குழு அறிவிப்பு