மனிதகுல வரலாற்றில் தகவல் பரிமாற்றம் ஒலியில் ஆரம்பித்து தற்போது வாட்ஸ்ஆப், டெலிகிராம் என நவீனப்பட்டிருக்கிறது. இந்த நவீன வசதியால் கண் இமைக்கும் நேரத்தில் நாம் சொல்ல நினைக்கும் விஷயங்கள் பிறருக்கு சென்று சேர்ந்தாலும் ஏதோ ஒரு வெறுமை இருப்பதாகவே முந்தைய தலைமுறை நினைக்கிறது. அது ஒருவகையில் உண்மையும்கூட.
ஏனெனில், இந்நவீன தலைமுறைக்கு முன்னர் தகவல் பரிமாற்றத்திற்கு கடிதங்கள் மட்டுமே ஒரே வழியாக இருந்தது. ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்புவரை அத்தனைக்கும் கடிதங்கள் மட்டுமே சாட்சியாக நின்றன. குறிப்பாக, எழுதுபவர், வாசிப்பவர் ஆகிய இருவரின் அந்தரங்கத்தை காப்பாற்றின.
அதுமட்டுமின்றி கடிதங்கள் மூலம் நிகழ்ந்த தகவல் பரிமாற்றம் என்பது வெறும் வார்த்தைகளாக இல்லாமல் உணர்வு குவியலாக இருந்தன. மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் இப்படி ஒரு வரி எழுதியிருப்பார்,
“நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக அதில் மிதந்தேனே அன்பே நானும் படகாக”. ஆம், கடித வரிகள் அதனை படிக்கும் நபரை எழுதியவரின் நினைவுகளில் மிதக்க செய்யும்.
இப்போது வளர்ந்துவிட்ட நவீனம் கடித போக்குவரத்தை குறைத்தாலும் கடிதங்களுக்காக காத்திருக்கும் பலர் இருக்கவே செய்கின்றனர். அன்றாட பரபரப்பில், பழமையைக் கைவிடாமல் அதே நேரத்தில் தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி, அஞ்சல் துறை மகத்தான சேவையை இன்னும் தொடர்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று.
நகரங்களையும் கிராமங்களையும் இணைப்பதில் அஞ்சல் துறை முக்கியமான ஒன்று. தனியார் கூரியர் சேவைகள் கிராமங்களை அலட்சியம் செய்தாலும், அஞ்சல் துறை கிராமங்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருகிறது.
ரயிலில் வரும் அஞ்சல் பைகளைப் பெற்று, தலைமை அஞ்சலகம், துணை அஞ்சலகங்கள், கடைக்கோடி கிராமத்தில் உள்ள கிளை அலுவலகம்வரை கடிதங்களைப் பிரித்து அனுப்பும் பிரமாண்ட பணி அஞ்சல் துறையினருடையது.
கடிதம் வெறும் காகிதம் இல்லை உணர்வு குவியல் கடித போக்குவரத்து குறைந்திருந்தாலும் வங்கி, பாஸ்போர்ட், போன்ற முக்கிய துறைகளின் ஆவணங்கள் கிராமங்களை அடைய அஞ்சல் துறைதான் முக்கிய இணைப்பு பாலமாக இருப்பது மட்டுமின்றி எளிய மக்களின் நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கிறது.
தபால் நிலையங்கள் குறித்து செங்கல்பட்டை சேர்ந்த முத்தம்மாள் என்ற மூதாட்டி பேசுகையில், “தபால் நிலையத்தில் இருப்பவர்களை எங்களது பிள்ளைகள் போல் பாவிக்கிறோம். எங்களால் தபால் நிலையத்திற்கு செல்ல முடியவில்லை என்றால் அவர்களே வீடு தேடி வந்து எங்களுக்கு உதவுகிறார்கள்” என்கிறார்.
கிராம அஞ்சலக ஊழியர்களில் தற்போது, ஏறத்தாழ சரிபாதி அளவில் பெண்கள் இருப்பது ஆரோக்கியமான ஒன்று. இது குறித்து பேசிய தமிழ்நாடு அஞ்சல் துறை இயக்குனர் வீணா சீனிவாசன், அஞ்சல் துறையில் 50 விழுக்காடு பெண் பணியாளர்கள் என்ற நிலையை அடைந்துவிட்டோம். ஆகஸ்ட் 31ஆம் தேதி 2021 கணக்குப்படி, அஞ்சல் துறையில் 3 கோடி பேர் தமிழ்நாட்டில் கணக்கு வைத்துள்ளனர்” என்று அவர் கூறுகையில் அஞ்சல் துறை தொடர்ந்து இன்னும் பல காலம் இயங்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
அஞ்சல் துறையின் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பேசிய முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் டி.வி. சுந்தரி, “வங்கிகள் தொடர்பான ஏடிஎம் கார்டுகள், செக் புக் போன்றவை அஞ்சல் துறை மூலமாகவே வருகின்றன. பார்சல் சேவையையும் நாங்கள் சிறப்பாகவே செய்துவருகிறோம்” என்றார்.
நாளொன்றுக்கு குறைந்தது, 30 முதல் 40 கி.மீ. பயணித்து கடிதங்களை அஞ்சல் துறையினர் உரியவர்களிடம் சேர்க்கின்றனர் இவர்கள். அஞ்சல் சேவை மட்டுமின்றி, வங்கிகள் போல, நிதி சார்ந்த சேவைகளையும் இந்தத் துறை அளித்து வருகிறது. குழந்தை முதல் பெரியவர்கள்வரை பல்வேறு தரப்புக்கும் சேமிப்புக் கணக்கு, வைப்பு நிதி, காப்பீடு என்று பல சேவைகளை இத்துறை வழங்குவது கிராம மக்களுக்குப் பேருதவியாக உள்ளது.
இவர்களின் பணிகளையும், கடிதங்களை இன்றும் மறக்காதவர்களை பார்க்கும்போது, 'நலம் நலமறிய ஆவல்' என யாருக்கேனும் கடிதம் எழுத ஆவலும், கடிதம் என்பது வெறும் காகிதம் இல்லை அது உணர்வு குவியல் என்ற எண்ணமும் எழுகிறது.