இருளர் இன மக்கள்
செங்கல்பட்டு அருகிலுள்ள பழவேலி பகுதியில், 200-க்கும் மேற்பட்ட இருளர் இனத்தவர் குடும்பங்களோடு வசித்துவருகின்றனர். பல ஆண்டுகளாக இவர்கள் தங்கள் தேவைகளுக்காக, தங்கள் பகுதியில் அமைந்துள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துதான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.
அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், தேசிய நெடுஞ்சாலையை யாரும் கடக்க முடியாத வகையில், குறுக்கே தடுப்பு அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் செய்துவருகின்றனர்.
சாலை மறியல்
இவ்வாறு தடுப்பு அமைக்கப்பட்டால், தாங்கள் சாலையைக் கடந்து சென்று எந்த வேலையும் செய்ய முடியாது என இருளர் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மயான பாதைக்குச் செல்வதிலும் தங்களுக்குச் சிரமம் ஏற்படும் எனக் கூறி, தடுப்புகள் அமைப்பதை நிறுத்தக் கோரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்துவந்த செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களிடம் பேசி உரியத் தீர்வு பெற்றுத் தருவதாகக் கூறி, மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கலைந்துபோகச் செய்தனர்.
இதையும் படிங்க: டெல்லியில் தற்கொலை போராட்டம்! - அய்யாக்கண்ணு அறிவிப்பு!