செங்கல்பட்டு: அஞ்சல் துறையின் ஒரு முக்கிய அங்கமாகக் கிராமின் டாக் சேவாக் (Gramin Dak Sevak) என அழைக்கப்படும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் உள்ளனர். இந்த கிராமிய அஞ்சல் ஊழியர்கள்கிராமப்புறங்களில் உள்ள கிளை அஞ்சலக அதிகாரிகளாகவும், தபால் பட்டுவாடாச் செய்யும் ஊழியர்களாகவும் பணி செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கானப் பணி நேரம் என்பது ஒரு நாளைக்கு நான்கு மணி நேரங்கள் மட்டுமே. இவர்களுக்கு, அடிப்படை ஊதியம் ரூ.10 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு, நிகர ஊதியமாக ரூ.12 ஆயிரம் வரை வழங்கப்படுகின்றது.
மேலும், அஞ்சல் துறையில் நிரந்தரப் பணியாளர்களாகப் பணியமர்த்தப்பட்டிருக்கும் இதே வேலையைச் செய்வோருக்கு, கிராமிய அஞ்சல் ஊழியர்களை விட மும்மடங்கு ஊதியம் கூடுதலாக அளிக்கப்படுகிறது என்கின்றனர். எனவே, தங்களையும் நிரந்தரப் பணியாளர்களாகக் கருதி அனைத்துப் பலன்களையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிச.12 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்தியக் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.