செங்கல்பட்டு:ஊர்ப்பெயர் தெரியாத நிதி நிறுவனங்கள் திடீரென முளைத்து விடுகின்றன. அவற்றை நம்பி, படிக்காத பாமரர் முதல் நன்கு படித்த வேலையில்லா பட்டதாரிகள், நல்ல பதவியில் உள்ளவர்கள் உட்பட பலரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த தங்கள் பணத்தை 'முதலீடு' (Investment) செய்து ஏமாந்து நிற்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
நிதிநிறுவனங்கள் தரும் ஆஃபர்கள் பின்னால் ஆப்பாகும்: பெரும்பாலும் சாத்தியப்படாத வட்டி விகிதங்களை அல்லது லாபத்தை வாடிக்கையாளர்களுக்குத் தருவதாகக் கூறித்தான் இத்தகைய மோசடி நிறுவனங்கள் வலை விரிக்கின்றன. உதாரணமாக, தங்களிடம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதத்திற்கு குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை லாபம் அளிப்பதாக இத்தகைய நிறுவனங்கள் மக்களின் மனதில் ஆசையைத் தூண்டுகின்றன. அதாவது, ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு '10 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம்!' எனக் கூறுவதை வாடிக்கையான தங்களில் ஆஃபராக கூறுகின்றனர்.
வங்கிகளையே மிஞ்சும் வட்டி, ஏமாற்று வேலையே:வங்கிகளில் நாம் செய்யும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களிலும், அதிகபட்சம் வருடத்திற்கு ஏழு முதல் எட்டு சதவீதம் தான் வட்டி விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு லட்ச ரூபாய் வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed deposit) எனும் திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால், ஒரு வருடத்திற்கு கிடைக்கும் அதிகபட்ச வட்டியே ரூ.6000-லிருந்து ரூ.8000-ஐத் தாண்டவே தாண்டாது. மாதத்திற்கு ரூ.500 முதல் ரூ.650 தான் நமது கணக்கில் வட்டியாக வரவு வைக்கப்படும்.
மோசடி செய்ய இடம் தராதீர்கள்: ஆனால், போலி நிதி நிறுவனங்கள் மாதத்திற்கே ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை அளிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறுவதால், வெளிச்சத்தைக் கண்ட வெட்டுக்கிளிகளைப் போல, மக்களும் ஏமாந்து விடுகிறோம். விட்டில் பூச்சிகளைப் போல் அனைத்து தரப்பினரும் முதலீடு செய்து ஏமாந்து நிற்கின்றனர். மோசடி பேர்வழிகளின் ஏமாற்று வேலை நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் மட்டும் நின்று விடுவதில்லை. இத்தோடு நிற்காத இந்த மோசடி பேர்வழிகளின் ஏமாற்று வேலைகள் மண்ணுளிப் பாம்பு, ஈமு கோழி வளர்ப்பு, இரிடியம், பணத்தை இரட்டிப்பாக்கித் தருதல் எனப் பல வகைகளிலும் தொடர்கின்றன.
மற்றொருபுறம் அங்கீகரிக்கப்படாத சீட்டு பிடிக்கும் நிறுவனங்கள் மக்களிடம் முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வருகின்றன. எத்தனை முறை, எத்தனை பேர் ஏமாந்தாலும் மீண்டும் மீண்டும் ஏமாறுவதற்கும் பலர் தயாராக உள்ளனர் என்பதே, இதில் வேதனை அளிக்கக் கூடிய ஒன்றாகும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.
சமீபத்தில் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட மெகா மோசடி நிதி நிறுவனங்களில் முக்கியமானவை ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எஃப்.எஸ். போன்றவை ஆகும். இதில் ஆருத்ராவில் மட்டும் 1,09,285 பேர், ரூ.2,438 கோடியை முதலீடு செய்து மாட்டிக்கொண்டனர்.
முதலீட்டாளர்களுக்கு அள்ளிக் கொடுப்பது தட்டி பறிக்கவே:ஹிஜாவு என்ற மோசடி கும்பலிடம் 89,000 அப்பாவி முதலீட்டாளர்கள் ரூ.4,400 கோடியை இழந்துள்ளனர். ஐ.எஃப்.எஸ். நிறுவனத்தில் 84,000 பேர் ரூ.5,900 கோடியை கொட்டிக் கொடுத்துவிட்டுத் தவிக்கின்றனர். எல்பின் என்ற நிறுவனத்தில் 11 ஆயிரம் பேர், ரூ.962 கோடிகளும், அம்ரோ கிங்ஸ் நிறுவனத்தில் 3 ஆயிரம் நபர்கள், ரூ.161 கோடிகளும் இழந்துள்ளனர். இவை கண்ணுக்குத் தெரிந்த வெளிச்சத்துக்கு வந்த சில மோசடிகளே. இன்னும் வெளியே தெரியாத பல வகையான பொருளாதார மோசடிகள் அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக நடக்கின்றன என்பதுதான் உண்மை.
பேராசையே துன்பத்திற்குக் காரணம்: இத்தகைய மோசடிகள் குறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்துக்கு சிறப்பு பேட்டியளித்த பிரபல பொருளாதார வல்லுநரும் முதலீட்டு ஆலோசகருமான வ.நாகப்பன் கூறும்போது, ''இத்தகைய மோசடிகளில் சிக்கும் பொதுமக்களை மட்டுமே நாம் குற்றம் சுமத்திவிட்டு ஒதுங்கி நின்று விட முடியாது. பேராசையால் பொதுமக்கள் இப்படி செய்கிறார்கள் என்று சுலபமாக சொல்லுவதை விட அடிப்படை பிரச்னையைப் பார்க்க வேண்டும்.
தற்போதைய பண வீக்கத்தைத் தாண்டி ஒவ்வொரு தனி நபரும் சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களில், வங்கிகள் போன்றவற்றில் அவர்களுக்கு கிடைக்கும் வட்டி விகிதம் மற்றும் பண வீக்கத்திற்கு உண்டான வித்தியாசங்களே மக்களை மாற்றி யோசிக்க வைக்கிறது.
மக்களுக்கான அடிப்படைத் தேவைகளே, தற்போது அதிகரித்து வருகின்றன. அவற்றை ஈடுகட்ட எதை செய்தால், எப்படி அதிக வருமானம் வரும் என்று சிந்திக்கும் நிலையில்தான் மக்கள் உள்ளனர். இவற்றை தான் மோசடி நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாக்கி விடுகின்றன.