இந்தியாவில் கரோனா வைரஸ் (தீநுண்மி) இரண்டாவது அலை பரவல் மீண்டும் அதிகரித்துவருவதால் வெளிநாட்டிலிருந்து வரும் விமான பயணிகளுக்குப் புதிய வழிகாட்டுமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதையடுத்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளான துபாய், சாா்ஜா, அபுதாபி, குவைத், சவுதி அரேபியா, ஓமன், கத்தாா், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் விமானம் ஏறும்முன் 72 மணி நேரத்திற்குமுன் கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை எனச் சான்று வைத்திருக்க வேண்டும். அந்தச் சான்றுடன் விமான நிலையத்திற்கு வரும்பயணிகள் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக தனியார் பரிசோதனை மையம் மூலம் ரூ.1,200, ரூ.2,500என இரண்டுவிதமான கட்டணங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. ரூ.1,200 கட்டண பரிசோதனை செய்தால் கரோனா முடிவு 6 மணியிலிருந்து 8 மணி நேரத்திற்குள் கிடைக்கும். ரூ.1,500 கட்டண பரிசோதனை செய்தால் 2 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்திற்குள் முடிவு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.