சென்னை :பள்ளி மாணவர்களிடம் சமீப காலமாக போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் கலாசாரம் அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன. ஆசிரியர் தினத்தன்று, போதையில் இருந்த மாணவர் ஒருவர் தனது பள்ளி ஆசிரியரைத் தாக்கிய சம்பவம் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்படும் ஒருவகையான போதைப் புகையிலையை கடத்தி வந்து தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வகை போதை புகையிலை பொருட்கள் பள்ளிகளின் அருகில் அதிக அளவில் கிடைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாகப் பள்ளி மாணவர்கள் பலரும் தடைசெய்யப்பட்ட போதைப் புகையிலைக்கு அடிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதுபோன்ற போதைப் புகையிலைக்கு அடிமையாகும் மாணவர்களும், இளைஞர்களும் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் போதை புகையிலை பயன்பாடு குறித்து சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார்.
அதில், "செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பது குறித்து ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களிடம் போதை தரக்கூடிய புகையிலை பயன்பாடு உள்ளதா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
பள்ளி அருகில் போதைப் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறது என்ற தகவல் தெரிந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் காவல்துறைக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். 'RBSK' என்ற நடமாடும் மருத்துவக் குழு பள்ளி மாணவர்களைப் பரிசோதிக்கும்.
அப்போது, அவர்களின் பற்களை பரிசோதித்து போதைப் பொருட்கள் பயன்படுத்தி உள்ளதற்கான கறைகள் பற்களில் உள்ளதா என்பதைக் கண்டறிந்து தெரிவிப்பர். அப்படி அடையாளம் காணப்பட்ட மாணவர்களுக்கு ரகசியமாகச் சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் அந்த மாணவர்களுக்கு எங்கிருந்து அந்த போதைப் பொருட்கள் கிடைக்கின்றன என்பதைக் கேட்டறிந்து அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் மூலம் மாணவர்களுக்குப் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:Chennai Crime: கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய ஓலா டிரைவர்... அண்ணன் கொலைக்கு காத்திருந்து பழி வாங்கிய தம்பி!