தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து; 6 பேர் பலி: நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!

கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆட்டோ மீது அரசுப்பேருந்து மோதிய பயங்கர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 4, 2023, 6:49 PM IST

ஈசிஆர் சாலையில் ஆட்டோ மீது பேருந்து மோதி பயங்கர விபத்து; 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

செங்கல்பட்டு: கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம் அடுத்துள்ள மணமை என்ற பகுதியில் பிற்பகல் ஆட்டோ ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்து அந்த ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கி, ஆட்டோவின் பாகங்கள் உடைந்து பேருந்தின் முன்பக்கம் ஒட்டிக் கொண்டன. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 2 குழந்தைகள், 3 பெண்கள், ஒரு ஆண் என ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்வையிட்டு அஞ்சலி செலுத்த தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், எண்.69, மணமை கிராமம் கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று (4-5-2023) மதியம் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி சென்ற பேருந்தும் பாண்டிச்சேரியிலிருந்து சென்னை நோக்கி வந்த ஆட்டோவும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த சென்னை, ஆலந்தூர், வ.உ.சி. நகரைச் சேர்ந்த திருமதி.காமாட்சி (வயது 80), திரு.கோவிந்தன் (வயது 60) திருமதி. அமுலு (வயது 50), திருமதி.சுகன்யா (வயது 28), குழந்தைகள் ஹரிபிரியா (வயது 8) மற்றும் கனிஷ்கா (வயது 6) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்'' எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:Video: அரசு பேருந்து சங்கரத்தில் சிக்கி அங்கன்வாடி ஊழியர் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

இதையும் படிங்க: மணிப்பூரில் வன்முறை - தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் பாதிப்பு - ராணுவப் படைகள் குவிப்பு!

இதையும் படிங்க: Actor Sarath Babu is Stable: நடிகர் சரத்பாபு நலமுடன் இருக்கிறார் - குடும்பத்தினர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details