செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் அண்ணன், தம்பிகளான வெங்கடேசன் (30), சந்திரன்(27). நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்களான இவர்கள் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இவர்களில் தம்பியான சந்திரன் கொக்கு, குருவி போன்றவைகளை வேட்டையாடி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அண்ணனான வெங்கடேசன் மாமல்லபுரத்தில் பாசிமணி வியாபாரம் செய்து வந்தார்.
ஒரே வீட்டில் வசித்து வந்த இருவருக்கும் வீட்டை பங்கு பிரிப்பதில் கடந்த 5 வருடங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணன் வெங்கடேசன் தம்பி சந்திரனுக்கு, வீட்டின் பின்புறம் உள்ள அவர்களின் தந்தையின் பூர்வீக இடத்தில் 2 சென்ட் நிலம், 2 சவரன் நகை, 50 ஆயிரம் பணம் ஆகியவற்றைத் தருவதாக கூறியுள்ளார்.
அதற்கு சந்திரன் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது உள்ள வீட்டில் தனக்கு பாகம் இருப்பதாகவும், தான் வெளியில் சென்று வசிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தச் சூழ்நிலையில் நேற்று ( மார்ச் 31 ) நள்ளிரவில் முழு மதுபோதையில் வீட்டில் இருந்த தம்பி சந்திரன் மீண்டும் அண்ணன் வெங்கடசேனிடம் தகராறு செய்துள்ளார்.