செங்கல்பட்டு: மதுராந்தகம், வன்னியர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (36). இவர் தனது நண்பர்களுடன் காரில் செய்யூர் அடுத்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள எல்லையம்மன் கோயிலுக்கு நேற்று (செப்.08) சென்றிருந்தார். பின்னர், அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கு இரவு நேரத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணம் செய்த கார் எல்.என்.புரம் அருகே சென்றபோது எதிரில் வந்த மினி வேன் ஒன்றின் மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. உத்திரமேரூரில் இயங்கிவரும் தனியார் ஏற்றுமதி தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் அந்த மினி வேன் மீது, கார் மோதிய வேகத்தில் கார் மோசமாக உருக்குலைந்தது.
இந்த விபத்தில் காரில் பயணித்த புருஷோத்தமன் அவரது நண்பர்களான வெங்கடேசன், குருமூர்த்தி, மற்றும் பூவரசன் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடன் பயணம் செய்த ரகு என்பவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். வேனில் பயணம் செய்த ஓட்டுநர் உள்பட நான்கு பேர் காயமடைந்து செய்யூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற செய்யூர் காவல் துறையினர், இறந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:“தலித் பத்திரிகையாளர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக இருக்கிறது” - முதலமைச்சர் ஸ்டாலின்