தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈழத் தமிழர்களை இந்தியா அரசு அடக்கி ஒடுக்கி வருகிறது - வைகோ குற்றசாட்டு. - SAYS VAIKO

சென்னை: சந்தேக வழக்குகளில் கைது செய்யப்படும் ஈழத் தமிழர்கள் எந்த ஒரு விசாரணையும் இன்றி, தீவிரவாதி போல் சித்தரித்து, ஆண்டு கணக்கில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

மதிமுக பொது செயலாளர் வைகோ

By

Published : Jun 23, 2019, 3:16 PM IST

சிங்கள் அகதிகள் ஒடுக்கப்படுவது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’சிங்கள அரசின் இனவெறித் தாக்குதல்களில் இருந்து தப்பி, உயிர் பிழைப்பதற்காகத் தமிழ்நாட்டிற்கு வந்து அடைக்கலம் புகுந்த ஈழத் தமிழர்களை, இந்திய அரசு பல வழிகளிலும் அடக்கி, ஒடுக்கி வருகின்றது. தமிழ்நாட்டில் சந்தேக வழக்குகளில் கைதாகின்ற இளைஞர்களை விசாரணைக்குப் பின்னர் விடுவிப்பது வழக்கம். ஆனால், ஈழத் தமிழ் இளைஞர்கள் என்றாலே, அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, எந்தவித விசாரணையும் இன்றி, செங்கல்பட்டில் இருக்கும் சிறப்பு முகாமிற்குள் ஆண்டுக்கணக்கில் பூட்டி வைத்திருக்கின்றனர். இது மனித உரிமைகளுக்கு எதிரானது.

நான் பல அகதி முகாம்களைப் பார்வையிட்டு, அங்கே உள்ள அவலநிலையை நேரில் கண்டு அறிந்தேன். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடையாது. கழிப்பறைகளின் பக்கமே போக முடியவில்லை. கிட்டத்தட்டத் திறந்தவெளி சிறைச்சாலை போலத்தான் இருக்கின்றன. அவர்களது வேதனைக் கண்ணீரைப் பல மேடைகளில் எடுத்துக் கூறியும் இருக்கின்றேன். ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடாவுக்குக் குடிபெயர்ந்த ஈழத்தமிழர்களை, அந்த நாடுகள் வரவேற்று மதித்து, உதவிகள் அளித்து, குடியுரிமையும் வழங்கி இருக்கின்றன. ஆனால், அகதிகளுக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் இன்றுவரை இந்தியா கையெழுத்து இடவில்லை.

இந்தியாவில் குடியுரிமை கோருகின்ற ஈழத் தமிழர்களுடைய விண்ணப்பங்களை, 16 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என, நேற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. எனவே, இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்களை, இந்திய அரசு இனியும் சந்தேகக் கண்ணோடு அணுகக் கூடாது. சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்; அத்தகைய முகாம்களை அடியோடு நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்’ என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details