'சிந்தும் ரத்தத்தைக் குடிக்கிற ஓநாய்களாக இருக்கும் ஆட்சியாளர்கள்' - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சென்னை: பொன்பரப்பி சாதிய தாக்குதல் தமிழ்த் தேசிய இனத்திற்கும் நேரிட்ட பேரிழப்பு, தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது, ’தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மறப்போர் நிகழ்த்திட்ட அண்ணன் பொன்பரப்பி தமிழரசன் உலவித் திரிந்த அதே மண்ணில் இன்றைக்குச் சாதிய மோதல்களும், தாக்குதல்களும் நிகழ்வது பெரும் மனவலியைத் தருகிறது. ஆதிச்சநல்லூர் ஆய்வுகளைக் கண்டு உலகத்தார் தமிழர்களின் பெருமையையும், தொன்மையையும் கொண்டாடிக்கொண்டிருக்கிற இவ்வேளையில் தமிழர்கள் சாதியால் பிளவுபட்டு மோதிக்கொண்டு நிற்கிறார்கள் என்பது வரலாற்றுப் பெருந்துயரம்.
தமிழ்த்தேசிய இனத்தின் ஓர்மைக்கு ஊறு விளைவிக்கும் விதமாக தமிழ்ச்சமூகங்களிடையே எழும் இச்சாதிய மோதல்களும், உள்முரண்களும் ஒட்டுமொத்த இன மக்களையே வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலகத்திற்கே உயிர்மை நேயத்தைப் போதித்த மேன்மை நிறைந்த தமிழ்ச்சமூக மக்களிடையே நிகழும் இதுபோன்றத் துயரங்கள் நம்மைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே இழுத்துச் செல்கிறது.
பொன்பரப்பியில் நிகழ்ந்த சாதியக் கொடுமைகள், தாக்குதல்கள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது. அதனை எதன் பொருட்டும் அனுமதிக்க முடியாது. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் நாம் மோதிக்கொள்ளும்போது சிந்தும் நமது ரத்தத்தைக் குடிக்கிற ஓநாய்களாக இம்மண்ணை ஆளுகிற ஆட்சியாளர்களும், கட்சிகளும் இருக்கின்றனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.