தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சட்டப்பேரவையிலேயே மாற்றுதிறனாளிகளுக்கு வசதிகள் இல்லை..!' - தீபக் குற்றச்சாட்டு

சென்னை: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாத நிகழ்ச்சிகளைப் பார்வையிடுவதற்காக மாற்றுத்திறனாளிகள் சட்டப்பேரவைக்கு வந்தபோது, சரியான வசதிகள் இல்லாததால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

டிசம்பர் 3 இயக்கம்

By

Published : Jul 10, 2019, 4:51 PM IST

சட்டப்பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள் துறை குறித்து புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. இதனால் இன்று நடக்கும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாத நிகழ்ச்சிகளைப் பார்வையிடுவதற்காக ‘டிசம்பர் 3 இயக்கம்’ சார்பாக அதன் மாநில தலைவரும், பேராசிரியருமான தீபக் உடன் சில மாற்றுத்திறனாளிகளும் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.

அவர்கள் தலைமைச் செயலகத்தில் நான்காவது நுழைவு வாயில் வழியாக உள்ளே வந்தனர். ஆனால் அப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் வருவதற்காக சாய்தள படிக்கட்டுகள் எதுவும் இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்பட்டு ஊன்று கோலை ஊன்றி படிக்கட்டுகளில் ஏறி வந்தனர். மேலும் பார்வையாளர்கள் மாடம் முதலாவது மாடியில் உள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் படிக்கட்டுகளில் ஏறிச் செல்வதை, படம்பிடித்த செய்தியாளர்களைக் கண்டதும் காவல்துறையினரும்,அலுவலர்களும் சுதாரித்துக் கொண்டு அவர்களை மாற்று வழியில் அழைத்துச் செல்வதற்காகக் கூட்டிச் சென்றனர்.

கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தீபக், “2019-20க்கான மாற்றுத்திறனாளி துறைக்கான மானிய கோரிக்கை மேல் விவாதங்கள் நடைபெற்றதால் அது எவ்வாறு உள்ளது என்பதை பார்பதற்கு மாற்றுத்திறனாளி ஆகிய நாங்கள் சட்டப்பேரவைக்கு வந்தோம். மாற்றுத்திறனாளி இயக்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான ‘கேட்கும் இடத்திலிருந்து கொடுக்கும் இடத்திற்கு வர வேண்டும்’ என்ற சித்தாந்தத்தைக் கொண்டு வரும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளில் ஐந்து விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்பது தான்.

இதை முன்வைத்து சட்டப்பேரவை உறுப்பினர் சேகர் பாபு பேசினார். மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கேட்டார். இதனை முதலமைச்சர் கவனத்தில் எடுத்துக் கொண்டு மாற்றுத்திறனாளிகளை அரசியல் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். அரசு உத்தரவு 151க்கு கீழ் இரண்டாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு காலமுறை ஊதியம் கொண்டு வர அரசு முன் வர வேண்டும்.

சட்டப்பேரவையிலேயே மாற்றுதிறனாளிகளுக்கு வசதிகள் இல்லை.

இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவதற்குள் அறிவிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இதன் மூலம் மாற்றுத்திறனாளி பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வரப்படும் என நம்புகிறோம். சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக வந்துசெல்ல ஏற்பாடுகள் செய்யவேண்டும்” எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details