முதுகலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வினை இந்தியா முழுவதும் உள்ள 167 மையங்களில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 148 எம்பிபிஎஸ் முடித்த மருத்துவர்கள் எழுதினர். அதில் 79 ஆயிரத்து 633 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களில் தமிழகத்திலிருந்து தேர்வெழுதிய 17 ஆயிரத்து 67 பேரில் 11 ஆயிரத்து 121 பேர் முதுகலை மருத்துவப் படிப்பிற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்ததாக கர்நாடகவில் தேர்வெழுதிய 15 ஆயிரத்து 616 பேரில் ஒன்பதாயிரத்து 219 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு எழுதியவர்களிலும், தகுதி பெற்றவர்களிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
முதுகலை மருத்துப் படிப்பிற்கான கட்-ஆப் மதிப்பெண் 1700. தகுதி மதிப்பெண்ணாக பொதுப்பிரிவினருக்கு 340, எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு 295 மதிப்பெண்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் 317 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் எட்வின் ஜோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2019-ம் ஆண்டு தமிழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்பில் 1,306 இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் போக மீதமுள்ள 708 இடங்களில் தமிழக மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
முதுகலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் 2019-ம் ஆண்டில் அதிக அளவிலான மாணவர்கள் தமிழகத்திலிருந்து நிறைய மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி உள்ளனர்.