மக்கள் அதிகாரம் அமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவன், “தமிழ்நாட்டில் இன்று அறிவிக்கப்படாத காவல்துறை ஆட்சிதான் நடந்து வருகிறது. ‘எது ஜனநாயகம்? எது கருத்துச் சுதந்திரம்? என்பதை உளவுப் பிரிவு, கியூ பிரிவு காவல்துறைதான் முடிவு செய்கிறார்கள். மக்கள் பிரச்னைக்காக போராடும் அமைப்புகளும், செயல்பாட்டாளர்களும் கொலை, கொள்ளைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் போல நடத்தப்படுகின்றனர்.
விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகத் துண்டறிக்கை விநியோகம் செய்த மாணவர்கள் மீது, பேருந்துகளின் மீது கல் வீசியதாகப் பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கின்றனர். கள்ளக்குறிச்சியில், ஸ்டெர்லைட் படுகொலைக்கு எதிராகத் துண்டறிக்கை விநியோகம் செய்த மாணவர்கள் தேசத் துரோக வழக்கில் சிறை வைக்கப்படுகின்றனர்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவன் அளித்தப் பேட்டி காவிரி உரிமைக்காக நெய்வேலியில் நடந்த பேரணியில் கலந்துகொண்ட பலர் மீது தேசத்துரோக வழக்குப் போடப்பட்டுள்ளது. கதிராமங்கலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகப் பரப்புரையில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் மீதும், அமைப்பைச் சேர்ந்த பலர் மீதும் எண்ணற்ற வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது எண்ணற்ற வழக்குகள் தொடர்ந்து போடப்பட்டு கைதுகள் நடக்கின்றன.
இப்படி நடக்கும் காவல்துறையின் ஆட்சியை நாம் அனுமதிக்கக்கூடாது. இதற்கு எதிராகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளும், மக்கள் மன்றத்தில் இயக்கங்களும், அறிவுத் துறையினரும், ஊடகங்களும் குரல் எழுப்ப வேண்டும், போராட வேண்டும் என்று கோருகிறோம். இத்தகைய காவல்துறையின் ஆட்சியை நடத்தி வரும் பழனிசாமியின் அரசைக் கண்டித்து ஜூலை 17ஆம் தேதி அன்று சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளது” என்றார்.