இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆற்காடு அடுத்து கீழ்விசாரம் என்ற ஊரில் வாக்குச் சாவடியில் நடந்த நிகழ்வு தலைகுனியத்தக்கதாகும்.
பாமகவைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, ஆற்காடு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.எல்.இளவழகன் மற்றும் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கூட்டமாக வாக்குச் சாவடிக்குள் செல்ல முயன்றுள்ளனர். துணை ராணுவப் படையினர் பாமகவினரை எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி தனது துப்பாக்கியால் ஒருமுறை சுட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் அதிர்ச்சியடைந்த பாமகவினர் சிதறி ஓடினர். வாக்குச் சாவடிக்குள் இருந்த அலுவலர்களும் அதிர்ச்சியடைந்தனர். பதற்றமான சூழலில் சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
முன்னதாக காஞ்சிபுரம் திருப்போரூரில் ஏப்ரல் 6 அன்று பேசிய அன்புமணி ராமதாஸ், ‘‘நம்மதான் இருப்போம் பூத்துல.... சொல்றது புரியுதா இல்லையா? எனப் பேசினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றும் நோக்கத்தில் அன்புமணி ராமதாஸ் இந்தக் கருத்தைத் தெரிவித்ததாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அன்புமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு என்ன மேல் நடவடிக்கை என்பது புரியாத புதிராகவே உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கே வெளிச்சம்!
இன்னொரு கொடுமையான நிகழ்ச்சியாக அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த பொன்பரப்பி கிராமத்தில் நேற்று கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையாகும். தருமபுரியில் நடந்ததின் நீட்சியாக இது கருதப்படவேண்டும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்த பா.ம.க., இந்து முன்னணியினர் நடத்திய வன்முறை வெட்கப்படத்தக்கதாகும். 20-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. கோடரியால் தாக்கப்பட்ட ஒரு தோழர் மண்டை உடைக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதே பொன்பரப்பியை அடுத்த கீழமாளிகை என்ற ஊரில் நந்தினி என்னும் தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அப்பகுதியில் பேட்டை முரடன் போலச் சுற்றித் திரியும் இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் முக்கியமாக இருந்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு, பிணத்தைக் கிணற்றில் வீசிச் சென்றாரே, அந்த வழக்கில் அவர் பெயர் சேர்க்கப்படவேண்டும் என்று கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அனைவரும் வலியுறுத்திய நிலையிலும், பாஜகவின் தொங்கு சதையாக இருக்கும் அதிமுக ஆட்சி, அந்த ஆள்மீது சிறு துரும்பும் படாமல் பாதுகாத்ததின் தொடர்ச்சிதான் எந்த எல்லைக்கும் சென்று தாழ்த்தப்பட்டவர்களைத் தாக்கலாம் என்ற துணிச்சலைத் தந்திருக்கிறது.
பா.ம.க.வும், இந்து முன்னணியும் கைகோர்த்துக் கொண்டு விட்டதா? இதுதான் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் பெரியாரை இடை இடையே போற்றும் பேச்சுக்கான இலட்சணமா? தேர்தல் வரும், போகும்; வெற்றி வரும் - போகும்; அதற்காக அனைத்தையும் பறிகொடுத்து பரிதாப நிலைக்கு ஆளாக வேண்டுமா? கீழ்விசாரம், பொன்பரப்பி வன்முறைகளுக்குக் காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முன்வரவேண்டும்; இன்றேல் நீதிமன்றம்மூலம் நடவடிக்கைகள் தொடரவேண்டும். மனித உரிமை ஆணையமும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் உடனடியாக தலையிட்டு உரியது செய்யப்படவேண்டும். அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.