தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய அரசுக்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம் - வைகோ அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டுக்கு எதிரான மத்திய அரசு திட்டங்களை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் வரும் 12ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Vaiko

By

Published : Jun 8, 2019, 11:14 AM IST

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது தனக்கு வருத்தமளிப்பதாக கூறினார். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதே தனது கருத்து எனவும், மத்திய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டிற்கு தொடர் ஆபத்துக்கள் வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், இங்கு 274 மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். ஸ்டெர்லைட் படுகொலைக்கு காரணமான தமிழ்நாடு அரசு, தற்போதும் அக்குழுமத்திற்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

மேலும், கோதாவரியிலிருந்து காவிரிக்கு தண்ணீர் வரும் என்பதெல்லாம் கானல் நீர் போன்றது என்ற அவர், மேகதாதுவில் அணை கட்டும் அவர்களின் நடவடிக்கை தமிழ்நாட்டிற்கு ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக வரும் 12ஆம் தேதி மதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபடும் என்றார். இப்போராட்டம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி ராமேஸ்வரம் வரை சுமார் 596 கிலோ மீட்டர் நடைபெறும் என்ற வைகோ, இதில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வைகோ பேட்டி

ABOUT THE AUTHOR

...view details