தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தித் திணிப்பு! திமுக-அதிமுக காரசார மோதல்

சென்னை: தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக-அதிமுக காரசார மோதல்

By

Published : Jul 15, 2019, 5:42 PM IST

இரண்டு நாள் விடுமுறைக்குப்பின், சட்டப்பேரவை இன்று கூடியதும் கேள்வி நேரம் முடிந்தபின் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அஞ்சல் துறை தேர்வை தமிழில் நடத்தாதது குறித்துச் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கண்டித்து அவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தேர்வு நடைபெற்றுள்ளது என்றார்.

தமிழ்நாடு இருமொழிக் கொள்கையைத்தான் தொடர்ந்து கடைப்பிடிக்கும், மத்திய அரசுக்கு அஞ்சல் துறை தேர்வினை பிராந்திய மொழியில் நடத்த வேண்டும் என்று திமுக-அதிமுக நாளை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.

அப்போது, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், தீர்மானத்தை நிறைவேற்றுவதில் என்ன சிக்கல் என்று கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு என்ன பதில் அளிக்கிறதோ, அதன்பிறகு, இருவரும் சேர்ந்து முடிவு எடுப்போம் என்றார்.

இதையடுத்து, மத்திய அரசைக் கண்டித்து தீர்மானத்தை நிறைவேற்றாமல் இருப்பதைக் கண்டித்து திமுக வெளிநடப்புச் செய்தது. இதற்கு, நாளை வரை பொறுத்துக்கொள்ள மாட்டீர்களா? என்று முதலமைச்சர் கேட்க, சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

பேரவையில் அதிகமான சலசலப்பு ஏற்பட்டதால், சபாநாயகர் தனபால் குறுக்கிட்டு, முதலமைச்சர் விளக்கம் அளித்த பிறகும் திமுக உறுப்பினர்கள் சத்தம் போடுவது சரியல்ல என்றார். திமுக வெளிநடப்பைத் தொடர்ந்து, காங்கிரசும் வெளிநடப்புச் செய்தது.

அவையிலிருந்து திமுக, காங்கிரஸ் வெளியேறும்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இருமொழிக் கொள்கை நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி பேசுமா? எனக் கேட்டதற்கு, கண்டிப்பாகப் பேசுவோம் என பதிலளித்துவிட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் திமுகவினருடன் வெளிநடப்புச் செய்தனர்.

அரை மணி நேரம் நடந்த அனல் பறக்கும் விவாதத்தால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details