100 விழுக்காடு வாக்குப்பதிவு என்ற தேர்தல் ஆணையத்தின் அறைகூவல் ஒருபுறம் இருக்க, மக்களவைத் தேர்தல் திருவிழாவின் ஒரு அங்கமாகத் தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவு பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் பல இடங்களில் மக்கள் தங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் ஆண்ட அரசும், ஆளும் அரசும் செய்துதரவில்லை எனக்கூறித் தேர்தலை முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர்.
திருப்பூர் தொகுதியில் பல்லடம் அருகே வெங்கடாபுரம், எம்.ஜி.ஆர்.நகர் பகுதிவாசிகள், நீர் நிலையை ஆக்கிரமித்து மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3000க்கும் மேற்பட்டோர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருபகுதிகளில் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக மக்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லாமல் இருந்தனர். பின்னர் நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு பகுதியினர் மட்டும் வாக்கு செலுத்தச் சென்றனர். ஆனால் சுத்தமல்லி, காந்திநகர் பகுதியில் உள்ள 700க்கும் மேற்பட்ட வாக்காளர் பெருமக்கள் எந்த வித சமரசத்துக்கும் உடன்படாமல், தேர்தலைப் புறக்கணித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், தேனி மாவட்டத்தின், போடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட குரங்கணி அருகில் உள்ள மலைக் கிராமமான செண்ட்ரல் ஸ்டேஷன் எனும் இடத்தில் 169 வாக்காளர்கள் தங்களுக்கு எவ்வித வசதியும் அரசுகள் செய்துதரவில்லை எனக்கூறித் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். காலை முதலே வாக்குச் சாவடிக்கு யாரும் வராததால், வீடு வீடாகச் சென்று மக்களிடம் வாக்களிக்கும் படி தேர்தல் அலுவலர்கள் கோரிக்கை வைத்தும், தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை எண்ணி, எவரும் வாக்களிக்கச் செல்லவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்கு உரிமையைப் புறக்கணித்த மக்கள்..... காரணம் என்ன! அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கவுனூர், தோட்டேதேவனஹள்ளி, குள்ளட்டி ஆகிய மூன்று மலைக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இதுவரை தார்ச்சாலை அமைத்து தரவில்லை எனக் குற்றஞ்சாட்டி 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். குள்ளட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இதுவரை ஒரு வாக்குகூட பதிவாகாத நிலையில், தேன்கனிக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மூன்று கிராம வாக்காளர் பெருமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும், இதில் சங்கமரெட்டியபட்டியில் குடிநீருக்காக சுமார் 2 கி.மீ. தொலைவில் செல்லும் அவலம் இருப்பதாகவும், அங்கும் காவிரி குடிநீர் குழாயில் கசியும் நீரைத்தான் பிடித்து வருகிறோம் என்றும், இதுதொடர்பாக தங்கள் கோரிக்கையை எந்த அரசும் செவி கொடுத்துக் கேட்டதில்லை எனக் கூறி இங்கு வசிக்கும் 180க்கும் மேற்பட்ட வாக்காளப் பெருமக்கள் தேர்தலைத் தவிர்த்துள்ளனர்.
இதேபோல் விருதுநகர் மாவட்டம், மீனாட்சிபுரத்தில் சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை எனக்கூறி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். இங்கு மொத்தம் 440 வாக்காளர்கள் வாக்களிக்காமல் உள்ளனர். திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி அருகே நாகராஜ கண்டிகையில் நச்சு தொழிற்சாலையை மீண்டும் செயல்பட அனுமதித்ததற்குத் தேர்தலை மக்கள் புறக்கணிப்பு செய்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள கிராமத்தில் 11 மணி வரை ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. தேர்தல் அதிகாரிகள், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்., காவல்துறையினர் வாக்களிக்க வருமாறு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கரூர் தொகுதியில் உள்ள சங்கம ரெட்டியபட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி அந்த கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ஆத்திகுளம் உள்பட பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களைச் சமாதானப்படுத்துவதில், தேர்தல் அலுவலர்களும், அரசியல் கட்சியினரும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.