ஜூன் 3ஆம் தேதியான அவரின் பிறந்தநாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகள் என திமுக, அதன் சார்பு அமைப்புகள் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவார்கள். அது மட்டுமல்லாமல், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அந்த மாதத்தையே உற்சாகத்துடன் கடத்திடுவது வழக்கம்.
இத்தனை ஆண்டுகள் இப்படி உற்சாகமாக நகர்ந்துகொண்டிருந்த திமுகவினரின் கொண்டாட்ட மனநிலை இந்தாண்டு சற்று தொய்வடைந்துள்ளது. இருப்பினும், அவரின் சாதனைகளையும், அர்ப்பணிப்புகளையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்திட வேண்டும் என்பதால் தங்களின் ஆருயிர் தலைவர் இல்லாத முதல் பிறந்தநாளையும் அதே உற்சாகத்துடன் கொண்டாடியே தீர வேண்டும் என தீர்க்கமாக இருக்கின்றனர்.
ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கும் அவரின் தொண்டர்களுக்கும் இத்தனை நெருக்கம் எப்படி சாத்தியமாகிறது என மாற்றுக் கட்சியினரும் வியக்கும் அளவிற்கான பந்த பாசம்தான் அவர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பு! ஏனெனில், தொண்டர்களை மதிக்கத் தெரிந்த தலைவர் அவர். அதனால்தான் இதனை அவராலும், அவரின் உடன்பிறப்புகளாலும் சாத்தியமாக்க முடிகிறது.
துரைமுருகன் ஒருமுறை மேடையில் பேசுகையில், ராசாமணி என்ற திமுக தொண்டருக்கும் கருணாநிதிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை அருகில் இருந்து பார்த்தவர் என்ற முறையில் மிக உருக்கமாகக் குறிப்பிடுவார். அது என்னவென்றால், தன் தலைவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் வந்த தொண்டர் ராசாமணியிடம் யார் மீதோ இருந்த கோபத்தை கலைஞர் காட்டிட, அழுது கொண்டே அங்கிருந்து ராசாமணி புறப்பட்டுச் செல்கிறார். அடுத்த சில நிமிடங்களிலேயே, ‘என்னய்யா துரை அவனை ரொம்ப திட்டிட்டேனா?’ என அருகிலிருந்த துரைமுருகனிடம் கேட்ட கலைஞர், ‘அவன் போயிருக்கல்லாம் மாட்டான். உடனே போய் கூட்டிட்டு வா’ என கூறியுள்ளார். உடனே ஆட்டோவிற்காக காத்திருந்த ராசாமணியை, ‘தலைவர் ஒன்ன கூப்பிடறாருய்யா’ என துரைமுருகன் அழைத்து வந்து கலைஞர் முன் நிறுத்தியுள்ளார்.
அப்போது கலைஞர், ‘ஏதோ கோவத்துல கத்திட்டேன்யா... என்னை மன்னிச்சுடு’ என ராசாமணியிடம் கூற, அவரோ ’அய்யய்யோ தலைவரே...’ என கலைஞர் முன் அழுது புரண்டுள்ளார். இது அறிவாலயத்தில் நடக்கும் அன்றாட காட்சிகள்தான் என்ற போதிலும், கருணாநிதிக்கும் அவரது தொண்டர்களுக்கும் உள்ள பந்தத்தை இந்த நிகழ்வின் மூலம் விவரித்திருப்பார் துரைமுருகன்.
‘தென்றலைத் தீண்டியதில்லை நான்... தீயைத் தாண்டியிருக்கிறேன்’ என பராசக்தி படத்தில் சிவாஜிக்காக அவர் எழுதிய வசனம் பின் நாட்களில் அவரின் வாழ்க்கையாக மாறியதுதான் இங்கு விந்தையாக அமைந்தது. சாலை விபத்து, நெஞ்சில் போற்றிய தலைவன் பேரறிஞர் அண்ணாவின் மரணம், ஆருயிர் நண்பன் எம்ஜிஆரின் பிரிவு, பகுத்தறிவை ஊட்டி வளர்த்த ஈரோட்டுச் சிங்கம் பெரியார் மறைவு, மிசா, ஆட்சி கலைப்பு, 13 வருட வனவாசம், ராஜீவ் படுகொலையால் சுமத்தப்பட்ட பழி, நான் பெற்றெடுத்த மூத்த பிள்ளை என கருணாநிதி விளித்த ‘முரசொலி’ அலுவலகம் எரிப்பு, வைகோ பிரிவு, நடு இரவில் கைது, 2ஜி குற்றச்சாட்டு, ஈழ விரோதி பட்டம், தேர்தல் தோல்வி என அத்தனையையும் கடந்து அவர் நதி போல் ஓடிக் கொண்டிருந்தததற்கும் அவரின் உடன்பிறப்புகள்தான் காரணம். அதனால்தான் அவர் எப்போதும் தன் தொண்டர்களை ‘என் உயிரினும் மேலான உடன்பிறப்புகள்’ என அடையாளப்படுத்தி வந்தார்.
ஆளாக்கிய அண்ணா மறைந்தபோது இவர் எழுதிய கவிதையின் மூலம் ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு இப்படி ஒரு தொண்டனா? என்கிற அளவுக்கு தன்னை ஒரு தலைசிறந்த தொண்டனாக நிலை நிறுத்திடவும் கருணாநிதி தவறவில்லை.
அண்ணாவிற்கு அவர் எழுதிய இரங்கற்பாவில், “மனிதரென்பார் - மாணிக்கமென்பார் மாநிலத்து அமைச்சரென்பார். அன்னையென்பார், அருள்மொழிக் காவலர் என்பார், அரசியல்வாதி என்பார் — அத்தனையும் தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் - நெஞ்சத்து அன்பாலே அண்ணா என்ற ஒரு சொல்லால் அழைக்கட்டும் என்றே அவர் அன்னை பெயரும் தந்தாரோ?” என்ற வரிகளில் நிரம்பியிருக்கிறது அவரது கவித்திறன். தன் தலைவன் அண்ணா மீது தான் கொண்ட காதலை இப்படியாக வெளிப்படுத்தியிருப்பார் கலைஞர்!
இப்படி உணர்வுமிக்க பல்வேறு நிகழ்வுகளையும், பல வரிகளையும் இங்கு நம்மால் பட்டியலிட முடியும். அவரின் வாழ்வு அத்தனை நீளமானது, அத்தனை முழுமையானது. இதை பொது சமூகம் உணர்ந்திட வேண்டிய தேவை கட்டாயம் உள்ளது. ஏனென்றால், சாதிய படிநிலைகள் நிறைந்த இந்த சமூகத்தில் காலணி தைப்பவரின் மகனும் கலெக்டர் ஆக முடியும் என்கிற அளவுக்கு அவர் ஆற்றிய செயல்களும், கொண்டுவந்த நலத்திட்டங்களும் எவராலும் தொடக்கூட முடியாத எட்டா ஏணியாகும்.