தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயணங்கள் முடிவதில்லை... நாளை டெல்லிக்கு பறக்கும் ஓபிஎஸ் - pannerselvam

சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நாளை டெல்லி செல்ல இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

eps

By

Published : Jun 19, 2019, 10:35 PM IST

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்தபோது, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி தாங்கள் இருவரும் ஒற்றுமையாய் இருப்பதாக எவ்வளவு தான் முயற்சித்தாலும், இருவருக்கும் இடையேயான உட்கட்சிப் பூசல்கள் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே நடக்கும் பனிப்போரை நிரூபித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

முதலமைச்சர் பழனிசாமி கடந்த வாரம் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில், மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தொடரில் கலந்துகொள்ள நாளை துணை முதல்வர் ஓபிஎஸ் டெல்லி செல்ல உள்ளார். அங்கு மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் டெல்லி சென்று அமைச்சர்களை சந்தித்த முதலைச்சர் பழனிசாமி ஒற்றை தலைமை பிரச்னை வரும்போது தமக்கு கட்சி ரீதியாகவும் மத்திய அரசு என்ற வகையிலும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

‘விலக்க’ம் ஏன்?

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுக படுதோல்வி அடைந்தது. மத்தியில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்ற ஓபிஎஸ் இபிஎஸ், தமிழ்நாடு திரும்பிய பின்னர், ஒன்றாக ஒரு நிகழ்வில் கூட சேர்ந்து பங்கேற்கவில்லை.

ஓபிஎஸ் மகனும், அதிமுக தரப்பில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத் குமார், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபோது கூட கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. இபிஎஸ் தரப்பு அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோர் பங்கேற்கவில்லை. ஜெயலலிதா நினைவிடம் இன்றும் அதிமுக தொண்டர்களால் முக்கியமாக பார்க்கப்பட்டு வருகிறது. முக்கியமான இந்த நிகழ்வில் முதலமைச்சர் பங்கேற்காதது தொண்டர்களுக்கு வருத்தத்தை அளித்தது.

காயிதே மில்லத் பிறந்த நாளுக்கு அவரது நினைவிடத்தில் துணை முதலமைச்சர் மட்டுமே மரியாதை செலுத்தினார். முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. அதிமுக சார்பில் நடந்த இப்தார் நோன்பு விழாவிலும் முதலமைச்சர் பழனிசாமியும், அவரது ஆதரவு அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. இதேபோல் மாற்றுக்கட்சியினர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்வு முதலமைச்சர் இல்லத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஒன்றில் கூட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டவில்லை.

மகனை மத்திய அமைச்சராக்க ஓபிஎஸ் போட்ட திட்டத்திற்கு வைத்திலிங்கத்தை வைத்து எடப்பாடி செக் வைத்ததே, உட்கட்சி பூசலின் உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் டெல்லி 'மேலிடம்' வரை சென்றதையடுத்து, இருவரில் யாரை அமைச்சராக்கலாம் என தெளிவாக முடிவெடுத்து வாருங்கள் என்று டெல்லி தலைமை அறிவுரை வழங்கியிருப்பதாக அப்போதே செய்திகள் வெளியாகின.

புதிய மாற்றங்கள் வருமா?

தலைமை செயலகத்தில் நடந்த பிளாஸ்டிக் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திலும் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் ஈபிஎஸ், தனது ஆதரவாளர்களான வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.இந்நிகழ்வில் ஓபிஎஸ் பங்கேற்காதது குறித்து விசாரித்தபோது, அவர் சிகிச்சைக்காக கோவை சென்றிருப்பதாக கூறியிருந்தனர். இந்நிலையில், ஓபிஎஸ் தற்போது டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து சில கோரிக்கைகளை வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறாக இருவருக்கு இடையேயும் நடந்து வரும் பனிப்போர், நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இது எந்த அளவுக்கு கட்சியை பாதிக்கும் என்பது போகபோகத்தான் தெரியவரும்.

ABOUT THE AUTHOR

...view details