தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி; வெளியேறுகிறதா தேமுதிக..? - எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி நீடிப்பதால், தேமுதிக வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

dmdk

By

Published : Mar 16, 2019, 5:25 PM IST

நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கிடையே தொகுதி ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. வெளிப்படையாக நலம் விசாரிப்பதற்காக விஜயகாந்த் வீட்டிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார் என்று சொல்லப்பட்டாலும், கூட்டணிக்கான தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பான சமரசப் பேச்சுவார்த்தைக்காகவே சென்றார் என்று கூறப்படுகிறது.

மேலும், முதலமைச்சர் மட்டுமல்ல அவருடன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற அமைச்சர்கள் தங்மணி, வேலுமணி, செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு உள்ளிட்டோரும் விட்டிற்குள் சென்றபோது இருந்த உற்சாகம் வெளியே வந்தபோது காணாமல் போயிருந்ததை பார்க்க முடிந்தது.விஜயகாந்த் உடனான சமரசம் ஒருவேளை நிறைவேறியிருக்கும் பட்சத்தில் இன்று தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து அதிமுக தரப்பு அறிவிக்க தயாராக இருந்த நிலையில், தற்போது அறிவிப்பு தாமதமாகும் என்று தெரிகிறது.

விஜயகாந்த் வீட்டிலிருந்து ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு வந்த முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் நீண்ட நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டனர். அதிமுக தரப்பிலிருந்து ஏதேனும் பதில் இருக்கும் என காத்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் பேட்டி ஏதும் கொடுக்காமல் புறப்பட்டு சென்றனர்.தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தது குறித்து பேசுவதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் வருவார் என்று கூறப்பட்ட நிலையில் அவரும் மதுரை புறப்பட்டு சென்று விட்டார்.

மொத்தத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இன்று இரவுக்குள் தொகுதிப் பங்கீட்டில் உள்ள பிரச்னைகள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இல்லாத பட்சத்தில் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் கசிகிறது. எது எப்படி இருந்தாலும் நாளை பிற்பகலுக்குள் ஒரு முடிவு எட்டப்படும் என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details