சென்னையில் ஓடும் கூவம், அடையாறு நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரிக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாக, ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தாக்கல் செய்த வழக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்தது.
அதில், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயைத் தூர்வாரிப் பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட காரணமான பொதுப்பணித் துறைக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பசுமைத் தீர்ப்பாயம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அபராத உத்தரவை எதிர்த்து பொதுப்பணித் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசுத் தரப்பில், 'கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமலும், கூவம் நதியை சுத்தப்படுத்த 604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துவருவதை கருத்தில் கொள்ளாமலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது' என எடுத்துரைக்கப்பட்டது.
ஏற்கனவே பசுமைத் தீர்ப்பாயம் இரண்டு கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
இந்த நிலையில் இன்று வழக்கில் இறுதி விசாரணை நடத்திய நீதிபதிகள் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்தனர்.