அரியலூர்:அரியலூரில் உள்ள சிங்கார தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (36). இவர் தனியார் சிட்பண்ட் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணி புரிந்து வருகிறார். இவருக்கு அரியலூர் மாவட்டம் மண்டையன்குறிச்சி விஜயகுமார் என்பவரின் மூலமாக, கோயமுத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள சிறுமுகை கிராமத்தில் வசிக்கும் ராஜ்குமார் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
பின்னர் சதீஷ்குமாரிடம் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறியுள்ளார் ராஜ்குமார், அதனை நம்பிய சதீஷ்குமாரும், ராஜ்குமார் நடத்தி வந்த ஸ்ரீவிருட்ச பீடம் வங்கிக் கணக்கிற்கு ரூ.14 லட்சத்து 20 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். அதையடுத்து பணத்தைப் பெற்றுக் கொண்ட ராஜ்குமார் நம்பிக்கை மோசடி செய்து, போலியான பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றியது மட்டுமின்றி, பணத்தைத் திருப்பித் தராமலும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த சதீஷ்குமார் இந்த மோசடி தொடர்பாகப் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் ராஜ்குமார் அரியலூர் மாவட்டத்தில், இதேபோல பல நபர்களிடம் இந்திய உணவு கழகத்தில் ஏஓ (AO) வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி, சுமார் 1 கோடியே 50 லட்சத்து 50 ஆயிரம் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு, போலியான பணி நியமன ஆணையை வழங்கி ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
மேலும், பணத்தைத் திருப்பிக் கேட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாருக்கு ராஜ்குமார் அவரது சொந்த ஊரான சிறுமுகையில் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த அந்த ரகசியத் தகவலின் பேரில், சிறுமுகையில் ராஜ்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு பொங்கலுக்குப் பின் வீடு வழங்க நடவடிக்கை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி!