அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்து தா.பழூர் அருகே உள்ள சாத்தாம்பாடி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலத் தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட தெருக்களில் இருந்து வடிகாலாகும் மழை நீர், வாய்க்கால் மூலம் வடக்குத் தெருவில் உள்ள சிவன் கோயில் குளத்தில் வடிகால் ஆவது வழக்கம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நீர்வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருப்பதால் மழை நீர் அதிகமாகி வீடுகளுக்குள் புகுந்தது.
அரியலூர் சாத்தம்பாடியில் பொதுமக்கள் சாலை மறியல்
அரியலூர்: வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழை நீர் கிராமங்களுக்குள் புகுந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 8) இரவு பெய்த கன மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் கைக்குழந்தையுடன் வீட்டுக்குள் புகுந்த நீரை பக்கெட் கொண்டு வெளியேற்றினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று (ஆகஸ்ட் 9) காலை சாத்தம்பாடி மெயின் ரோட்டில் தா.பழூர் - ஸ்ரீபுரந்தான் வழியாக அரியலூர் செல்லும் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "பலமுறை இது சம்பந்தமாக அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சாத்தாம்பாடி கிராமத்தில் அனைத்து தெருக்களில் உள்ள நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி மழை நீர் வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.