அரியலூர்: கீழப்பழுவூர் அருகே நாட்டு பட்டாசுகள் தயாரிப்பு ஆலையில் இன்று (அக்.9) ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள வெற்றியூரில் ராஜேந்திரன் என்பவரின் நாட்டு பட்டாசுகள் தயாரிப்பு ஆலையில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலையின் அறைகள் அனைத்தும் தரைமட்டமாகின. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி 3 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் மற்றும் அவரது மருமகன் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் திருச்சி சரக டிஐஜி பகலவன், அரியலூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (அக்.9) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்று, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகிய இருவரையும் அனுப்பி வைத்துள்ளேன். மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50ஆதாயிரம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அரியலூர் பட்டாசு ஆலையில் தீ விபத்து! வைரல் வீடியோ..!