அரியலூர்:அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழக அரசின் எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலாளருமான ரமேஷ் சந்த் மீனா,தனது இரண்டாம் நாள் ஆய்வில் அதிரடி காட்டியதால் அதிகாரிகள் திகைத்து நின்றனர். தமிழக அரசு பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பயனாளிகளை முறையாக சென்றடைவதை கண்காணிக்கும் வகையில் மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்துள்ளது. அதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களால் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தமிழக அரசின் எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலாளருமான ரமேஷ் சந்த் மீனா, கடந்த இரண்டு நாட்களாக அரியலூர் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் ஆய்வுகளைத் தொடர்ந்து இன்றைய தினம் இரண்டாவது நாளாக அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ரமேஷ் சந்த் மீனா, மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தனது ஆய்வில் அதிரடி காட்டியதால் அதிகாரிகள் திகைத்து நின்றனர்.
இரண்டாம் நாள் ஆய்வில் ஜெயங்கொண்டம் ஒன்றியம், மேலக்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, மாணவர்களின் எண்ணிக்கை, உணவின் தரம் போன்றவை குறித்து கேட்டறிந்ததுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை சாப்பிட்டு ஆய்வு செய்தார். மேலும், பள்ளி குழந்தைகளுக்கு தொடர்ந்து சரியான நேரத்தில் தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், கீழக்குடியிருப்பு மதுரா கொம்மேடு கிராமத்தில் உள்ள பயோ குப்பைக் கிடங்கினை ஆய்வு செய்து குப்பைகள் தரம் பிரிக்கப்படும் முறைகள் குறித்தும், குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், குப்பைகள் அகற்றும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், செங்குந்தபுரத்தில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கழுவந்தோண்டி கிராமத்தில் ரூ.40.91 லட்சம் மதிப்பீட்டில் கழுவந்தோண்டி மயான சாலையில் கட்டப்பட்டு வரும் பாலம் அமைத்தல் பணியையும், ரூ.2.78 லட்சம் மதிப்பீட்டில் நீதிமன்ற சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்கால் பணியையும், ரூ.4.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கதிரடிக்கும் களம் கட்டுமான பணியையும் பார்வையிட்டு நடைபெறும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், பெரியவளையம் கிராமத்தில், தோட்டக்கலைத்துறையின் சார்பில் மானிய விலையில் ரூ.75,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டை பார்வையிட்டு பண்ணை குட்டையின் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து அதனை முறையாக பயன்படுத்தவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், மீன் வளர்ப்பு, மழைநீர் வரும் பாதை ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், ஜெயங்கொண்டம் ஒன்றியம், ஆமணக்கந்தோண்டி அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளின் வருகைப்பதிவேடு, பணியாளர்களின் வருகைப் பதிவேடு, உணவு பொருட்கள் இருப்பு போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் குழந்தைகளின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு செய்தார்.