அரியலூர்: வண்டல் மண் எடுப்பதற்கு மாவட்டத்தில் சிறப்பு முகாம் ஃஅடத்தப்படவுள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளதாவது, “2021-22 ம் ஆண்டு முதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கிராம பஞ்சாயத்துகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்தி, அக்கிராமப் பஞ்சாயத்துகளைத் தன்னிறைவு பெற்ற கிராமங்களாகவும் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி பெற்ற கிராமங்களாகவும் மாற்றுவதே, இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நடப்பு ஆண்டில் இத்திட்டம், அணிக்குதிச்சான், அய்யூர், கொளத்தூர், பெரியாத்துக்குறிச்சி, விழுதுடையான், பெரிய கருக்கல், ஒட்டக்கோவில், கருப்பில்லாக்கட்டளை, சென்னிவனம், வெங்கட கிருஸ்ணாபுரம், கல்லங்குறிச்சி, அஸ்தினாபுரம், கோமான், உட்கோட்டை, இளையபெருமாள்நல்லூர், தேவமங்கலம், வெத்தியார்வெட்டு, கழுவந்தோண்டி, பெரிய வளையம், கழுமங்கலம், நாகமங்கலம், செந்துறை, பிலாக்குறிச்சி, நல்லாம்பாளையம், குமிழியம், வீராக்கண், உதயநத்தம், ஸ்ரீபுரந்தான், குணமங்கலம், காசான்கோட்டை, நடுவலூர், அணைக்குடம், கோடங்குடி, மணகெதி, வெற்றியூர், வாரணவாசி, திருமழப்பாடி, வெங்கனூர், மலத்தான்குளம், செம்பியக்குடி மற்றும் விழுப்பணங்குறிச்சி ஆகிய 42 கிராமப் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் சர்க்கரைத்துறை ஆகிய துறைகளின் திட்டங்களைத் தேர்வு செய்யப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் செயல்படுத்துவது மட்டுமல்லாது, வேளாண்மை - உழவர் நலத்துறையின் தொடர்புடைய துறைகளான வருவாய், ஊராட்சி, கால்நடை, கூட்டுறவு, பால்வளம் போன்ற துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.