அரியலூர்: உடையார்பாளையம் அருகே உள்ள பொட்டக்கொல்லை கிராமத்தில் இயங்கி வரும் மச்சான்ஸ்கறி உணவகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு உணவுத் திருவிழா பரோட்டா போட்டி நடைபெற்றது.
மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே நடைபெறும் போட்டியின் விதிமுறைகள், தனிநபராக 30 நிமிடங்களில் 10 பரோட்டா சாப்பிட்டால், சாப்பிட்ட பரோட்டாவுக்கு பணம் கொடுக்க தேவை இல்லை. அவருக்கு உணவகம் சார்பாக 100 ரூபாய் பரிசளிக்கப்படும்.
10 பரோட்டா சாப்பிட முடியாதவர்கள் அவர்கள் சாப்பிட்ட பரோட்டாவுக்கான பணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு போட்டியும் 30 நிமிடங்கள் நடைபெறும். ஒரு டேபிளுக்கு 4 பேர் அமரவேண்டும். நண்பர்களாகவோ அல்லது வேறு நபர்களுடனோ சேர்ந்து அமரலாம். ஒரு டேபிளில் 4 பேர் அமர்ந்த பின்னரே போட்டி துவங்கும். ஆண், பெண் என அனைத்து வயதினர்களும் பங்கேற்கலாம்.
30 நிமிடங்களில் ஒரே டேபிளில் அமர்ந்துள்ள நால்வரில் யார் அதிக எண்ணிக்கையில் பரோட்டா உண்ணுகிறாரோ அவரே அந்த டேபிளின் வெற்றியாளர். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 3 பரோட்டா உண்ண வேண்டும். முழுமையாக உண்ணப்படும் பரோட்டா மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். போட்டி முடியும் வரை கண்டிப்பாக வாந்தி எடுக்கக்கூடாது.
வெற்றியாளர் தவிர டேபிளில் எஞ்சியுள்ள மூவரும் தாங்கள் உண்ட பரோட்டாவுக்கு பணம் செலுத்த வேண்டும்.
உள்ளிட்ட விதிமுறைகள் படி நடைபெற்றது. இதனையடுத்து ஒவ்வொரு டேபிளிலும் இளைஞர்கள், சப்ளையர்கள் கொண்டு வந்த புரோட்டா மற்றும் சால்னாவை போட்டி போட்டுக் கொண்டு பதம் பார்த்தனர்.
சிலர் ஆர்வக்கோளாறில் உண்ண முடிந்தாலும் போட்டியின் இலக்கை எட்ட முடியாமல் பரிதவித்தனர்.
போட்டியில் மேலூர் கிராமத்தைச் சேர்ந்த சூரியன் என்பவர் 10க்கும் மேற்பட்ட பரோட்டாக்களை சாப்பிட்டு முதலிடத்தை பெற்று பரிசு பணம் 100 ரூபாயை பெற்றார். இதில் அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பரோட்டா போட்டியில் பங்கு பெற்றனர்.
பரோட்டா சாப்பிடும் போட்டி இதையும் படிங்க: இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி...யானை தந்தத்தால் ஆன சிற்பத்தின் பாகம் கண்டெடுப்பு