அரியலூர்:ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் செந்துறை கிராமத்தை சேர்ந்தவர், ராமசாமி. கடந்த 1942ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தின் செயல்பாடுகளால் கவரப்பட்ட இவர், தனக்கு சொந்தமான இரண்டு வீடுகளை விற்று அதில் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸை சந்தித்து, அவரிடம் வீடு விற்ற பணத்தை இந்திய தேசிய ராணுவத்துக்கு நன்கொடையாக வழங்கி தன்னையும் ராணுவ வீரனாக இணைத்துக் கொண்டார்.
இவரது மனைவி ஜக்குபாய் மற்றும் மகன் தீனதயாளன் ஆகியோர் அதே பகுதியில் குடிசை வீடு அமைத்து தங்கினர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் ராமசாமி இணைந்ததால் பிரிட்டிஷ் அரசின் கடுமையான நடவடிக்கைக்கு அவர் உட்படுத்தப்பட்டார். சிறைவாசமும் அனுபவித்தார்.
தொடர்ந்து நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சொந்த ஊரான செந்துறைக்கு திரும்பினார். குடிசை வீட்டிலேயே காலம் தள்ளியவர் கடந்த 1978ஆம் ஆண்டு காலமானார். தேசிய ராணுவத்துக்கு வீடுகளை விற்று நிதி கொடுத்துவிட்டு, தங்க இடமில்லாமல் குடிசை வீட்டில் வசித்த இவரது மனைவி ஜக்குபாய் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அல்லது இலவச வீடு போன்ற ஏதாவது ஒரு நல திட்டங்களை செய்து தருமாறு கோரி ராமசாமியின் சான்றிதழ்களோடு ஆட்சித் தலைவர்களிடம் முறையிட்டார்.
திருச்சி மாவட்டத்திலிருந்து செந்துறை என்ற கிராமம் பின்னர் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்கு மாறியும், தற்போது அரியலூர் மாவட்டத்திலும் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மனு கொடுத்து, மனு கொடுத்து, போராடி பார்த்த ஜக்குபாய் 2018ல் காலமானார். இந்த தம்பதியின் ஒரே மகனான தீனதயாளன் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்க்கையை நடத்தி வருகிறார். தற்போது அவருக்கு வயது 64.