அரியலூர் மாவட்டம் பெரம்பலூரிலிருந்து பிரிக்கப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்திற்கென தனித்தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அரியலூரிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆறு நீதிமன்றங்களும், தனியார் கட்டடங்களில் மூன்று நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன.
தனியார் கட்டடங்களில் செயல்பட்டுவரும் விரைவு மகளிர் நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றங்களின் வாடகைக்காக மட்டும் அரசு மாதம் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 400 ரூபாய் செலவழித்து வருகிறது.
அதுமட்டுமின்றி, இந்த மூன்று நீதிமன்றங்களும் வெவ்வேறு திசைகளில் அமைந்துள்ளதால், பொதுமக்களும், வழக்கறிஞர்களும் நீதிமன்றங்களுக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.
இந்த இடர்பாடுகளை களைய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கக்கோரி கடந்த ஒருமாத காலமாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் இதுகுறித்து எவ்வித முடிவும் எடுக்காமல் உள்ளன.
மூன்று கட்டடங்களுக்கும் ஒரு வருடத்திற்கு கொடுக்கும் வாடகை பணத்தில் ஒரு புதிய நீதிமன்றத்தையே கட்டிவிடலாம் என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாதத்திற்கு லட்சத்தை வீணாக்கும் அரியலூர் நீதிமன்றங்கள் மேலும், தமிழ்நாடு அரசும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து காலியாக உள்ள பல்துறை வளாகத்தில் மூன்று நீதிமன்றங்களையும் செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:கனிமொழி தேர்தல் வெற்றி வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு