அரியலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம், கொள்ளிடம் ஆறு. திருமானூர், தா.பழூர் ஒன்றியங்களில் நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் ஆற்றுப்படுகையாக இந்தக் கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்டம், திருவெங்கனூர் எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சவுடு மண் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால், அரசு அறிவித்துள்ள அளவிற்கு அதிகமாக சவுடு மண் இங்கு எடுக்கப்படுதாகவும், இவ்விடத்தில் மணல் கொள்ளை தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும், மணல் எடுப்பதற்காக அதிக ஆழம் வரை குழிகள் தோண்டப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் ஏற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் கூறுகையில், “சட்டவிரோதமாக மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகளின் போர்வெல் நின்றுவிடும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் குடிநீர் பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மணல் கொள்ளை தொடர்பாக கழுகு பார்வையில் சிக்கிய காட்சிகள்! எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சவுடு மண் எடுப்பது குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அரசு அனுமதி அளித்த அளவிற்கு அதிகமாக, அதிக ஆழத்தில் மணல் அள்ளப்படுவதை தடை செய்ய வேண்டும். குறிப்பாக, சவுடு மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றுவிட்டு மணல் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க : மணல் திருடவந்த லாரிகளைச் சிறைப்பிடித்த பொதுமக்கள்!