அரியலூர்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, முன்னிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தரேஸ் அஹமது, ஆய்வு செய்தார்.
செந்துறை ஒன்றியம், செந்துறை ஊராட்சி சமத்துவபுரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகள் பழுது பார்த்து, பராமரித்தல் உள்ளிட்ட சமத்துவபுரம் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, பணி முடிவுற்ற வீடுகள் குறித்தும், பணிகளின் தரம் குறித்தும் கேட்டறிந்து, ஆய்வு செய்ததுடன், நடைபெறும் பணிகளை பார்வையிட்டு, விரைவில் இப்பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சமத்துவபுரத்தில் ரூ.43.91 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுப் பணியையும் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரினை அருந்தி, குடிநீரின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். செந்துறை முதல் இலங்கைச்சேரி வரை ரூ.24.36 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை அமைத்தல் பணியையும், ஜெயங்கொண்டம்-செந்துறை சாலை ரூ.46.64 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்தல் பணியையும் பார்வையிட்டு, சாலைப் பணிகளின் அளவு மற்றும் தரத்தினை ஆய்வு செய்தார்.
ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை ஊராட்சியில் காடுவெட்டி சாலை முதல் தவுசுக்குழி புதுஏரி வரை ரூ.9.65 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மெட்டல் சாலை பணியை பார்வையிட்டு, சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தார். ஆண்டிமடம் ஊராட்சி, சூரக்குழில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முந்திரி உற்பத்தி சிறிய அளவிலான தொழில் தொகுப்பு மகளிர் சுயஉதவிக்குழு கட்டடம் ரூ.10.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு தற்பொழுது வர்ணம் பூசுதல் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும், சுயதொழில் விவரம், சுயதொழில் வருமானம், மகளிர் சுயஉதவிக்குழுக்களின் முன்னேற்றம், தமிழக அரசின் திட்டங்கள் போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தார்.
இலங்கைச்சேரியில் உள்ள பழுதடைந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக் கட்டடத்தினை பார்வையிட்டு, பழுதடைந்த கட்டடத்தினை பாதுகாப்பாக இடித்து அகற்றி, புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான கருத்துருவை அரசுக்கு அனுப்பவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இலங்கைச்சேரி கீழத்தெருவில் அஞ்சலை என்பவரின் இல்லத்திற்கு நேரடியாக சென்று அவரது கூரை வீட்டை பார்வையிட்டு, அரசின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய வீட்டினை கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அருந்ததியினர் தெருவைச் சேர்ந்த சித்ரா என்ற பயனாளியின் வீட்டிற்கு சென்று அவரது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட அட்டையினை வாங்கி பார்வையிட்டு, இத்திட்டத்தின்கீழ் ஊராட்சியில் வழங்கப்பட்ட வேலை நாட்களின் எண்ணிக்கை, சம்பள விவரம், வேலை விவரம் போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து, அரசுப் பணி ஒதுக்கீடு நாட்களுக்கு வேலை தொடர்ந்து வழங்கவும் அறிவுறுத்தினார்.
அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் குடிசை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றுள்ளது குறித்தும், கணக்கெடுப்பு பணியின்போது கேட்கப்பட்ட கேள்விகள் உள்ளிட்ட பிற விவரங்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். கிராமப் பகுதிகளில் தமிழக அரசின் திட்டப்பணிகளை தொடர்ந்து முறையாக செயல்படுத்துவதுடன், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தரேஸ் அஹமது, அறிவுறுத்தினார்.
பின்னர், அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த கூட்டத்தில், அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் குடிசை கணக்கெடுப்பு பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம், ஆன்லைன் வரி, ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் போன்ற திட்டப்பணிகளில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில் இத்திட்டத்தில் சுனக்கமாக செயல்படும் ஊராட்சிகளின் தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, திட்டப்பணிகளை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து கேட்டறிந்து, அரசின் திட்டப்பணிகளை தங்குதடையின்றி சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, அரசின் திட்டப்பணிகள் செயல்படுத்தும் முறைகள் குறித்தும் கேட்டறிந்து, ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்று சேரும் வகையில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தரேஸ் அஹமது, அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, ஆட்சியர் ரமண சரஸ்வதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் முருகண்ணன், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தரேஷ் அகமது ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இதே பகுதியில் பணியாற்றியவர். ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, அரியலூர் மாவட்டமும் பெரம்பலூர் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அதன் பிறகு தான் அரியலூர் மாவட்டம் தனியாக இயங்கத் தொடங்கியது. ஆனாலும், பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பெரம்பலூர் மாவட்ட கட்டுப்பாட்டில் தான் இருந்தன.
அந்த வகையில் ஐஏஎஸ் அதிகாரி தரேஷ் அஹமதுவுக்கு அரியலூர் மாவட்ட நிலவரங்கள் முழுவதுமாக அத்துபடி.
ஏற்கனவே ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய முன் அனுபவம் இருந்ததால் அரியலூர் மாவட்டத்தின் ஆய்வுப்பணிகளின் போது தனது அதிரடிகளை காட்டத் தொடங்கினார். சமத்துவபுரத்தில் நுழைந்த அவர் அங்கிருந்த ஒரு வீட்டில் ’குடிக்க தண்ணி கொண்டு வாங்க’ என்று உரிமையாக கேட்டார். சம்பந்தப்பட்ட வீட்டை சேர்ந்த ஒரு இளம் பெண் ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
அந்த தண்ணீரை குடித்துப் பார்த்த தரேஷ் அகமது தண்ணீரின் தரம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். தொடர்ந்து இலங்கைச்சேரி என்ற இடத்துக்கு சென்ற அவர், அஞ்சலை என்பவருக்கு ஏற்கனவே கான்கிரீட் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் தற்போதும் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். கான்கிரீட் வீடு பணிகள் முற்றுப்பெறவில்லை என கேட்டறிந்தார்.
இதைக் கண்ட அவர், இந்தப் பணிகள் ஏன் முற்றுப்பெறாமல் இருக்கிறது என்று அங்கிருந்து அதிகாரிகளை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி இந்த பணிகளை உடனே முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். தொடர்ந்து அதே பகுதியைச் சார்ந்த அருந்ததியர் காலனி என்ற இடத்திற்கு சென்ற தரேஷ் அஹமது, அங்கு வசிக்கும் சித்ரா என்ற பெண்ணை அழைத்து ’100 நாள் வேலை திட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்களா...?’ என கேட்டார். ஆமாம் என்று அந்தப் பெண் சொன்னார்.
உடனே 100 நாள் வேலை திட்ட கார்டை கொடுங்க என்று கேட்ட அவர், 100 நாள் வேலை திட்டத்தில் உங்களுக்கு தினசரி வேலை கிடைக்கிறதா? குறிப்பிட்ட நாள் வரை வேலை கொடுக்கிறார்களா.. இல்லையா... ? என்று அந்த பெண்ணிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
ஐஏஎஸ் அதிகாரி கேள்வி கேட்டதும் அந்த பெண்ணோ திடுக்கிட்டு போய் உளறத் தொடங்கினார்.
இவ்வாறு வரிசையாக ஒவ்வொரு இடத்திலும் தனது அதிரடி காட்டிய ஐஏஎஸ் அதிகாரி தரேஷ் அஹமது, இறுதியாக அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை அதிகாரிகளையும் லெப்ட் ரைட், வாங்கி பணிகள் சரியாக முடிக்கப்பட வேண்டும் பொது மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க:அபயாம்பிகை யானைக்கு பொன்விழா எடுத்து கொண்டாடிய மயிலாடுதுறை பக்தர்கள்