காவிரி உபரி நீர் பாசனம் மூலம் அரியலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதிகளான தா.பழூர், திருமானூர் ஒன்றியத்தில் சம்பா பட்டம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கூடுதலாக பொழிந்த மழையால் சம்பா பட்டம் நெல் சாகுபடி அமோக விளைச்சலை கண்டது. இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை விற்பனை செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குச் சென்ற விவசாயிகளுக்கு அதிர்ச்சி தரும் விதமாக, போதிய கோணிபைகள் இல்லை என்று காரணம் சொல்லப்பட்டு அறுவடைச் செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அம்மாவட்டத்தின், 21 நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றது. குறிப்பாக ஸ்ரீபுரந்தான் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவதும் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் தேங்கி கிடக்கிறது.
இது குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் தருமராஜன் கூறுகையில், “நெல் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம் கோணிப் பைகளை தைப்பதற்குச் சணல் வாங்கி கொடுக்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு உள்ளது. இரண்டு சிற்பங்களை தனியாரிடம் விற்றால் ஒரு விவசாயிக்கு 400 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது.
வேறு வழியின்றி நெல் மணிகளைப் பாதுகாக்க முடியாத நிலைக்கு சிலர் தனியாரிடமும் விற்று வருகின்றனர். தற்போது அனைத்து பகுதிகளிலும் சுமார் 80 % நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றது. இதனால் ஒருபக்கம் அறுவடைக்கு தயாரான கழனிகளும் அறுவடைக்கு வழியின்றி இருக்கின்றன.