அரியலூர்:இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சித் திட்டங்களை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு (SSC, MTS, SSC CGL, SSC CHSL, SSC JE) 2023ஆம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டியை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://ssc.nic.in) வெளியிட்டுள்ளது. இதன்படி 11,000 காலி அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பயிற்சிக்கு 18 முதல் 32 வயது வரை உள்ள 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்விற்கு விண்ணப்பிப்பதும் மற்றும் தேர்வு நடைபெறுவது அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும். இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித்தேர்வு, சில பிரிவுகளுக்கு உடற்தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய மூன்று முறைகளில் நடைபெற உள்ளன.
மேலும் இந்த போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணியாளர், தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிக்கேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக 18,000 ரூபாய் முதல் 22,000 வரை பணியமர்த்தப்படுவர். எனவே இந்தப் பயிற்சிக்கு விருப்பமுள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் பயன் பெற www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதேபோல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் புதியதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2022 - 2023ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் மோட்டார் குதிரை திறனுக்கேற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 3.60 லட்சம் ரூபாய் வரை மானியத்தில் 900 ஆதிதிராவிடர் மற்றும் 100 பழங்குடியினர் என மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளாகவும், விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5HP (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் 2.50 லட்சம் ரூபாயில் பயனாளி 10 சதவீத பங்குத்தொகை 25,000 ரூபாயும், 7.5HP மின் இணைப்பு கட்டணம் 2.75 லட்சம் ரூபாயில் பயனாளி 10 சதவீத பங்குத்தொகை 27,500 ரூபாயும், 10HP மின் இணைப்புக் கட்டணம் 3 லட்சம் ரூபாயில் பயனாளி 10 சதவீத பங்குத்தொகை 30,000 ரூபாயும், 15HP மின் இணைப்புக் கட்டணம் 4 லட்சம் ரூபாயில் பயனாளி 10 சதவீத பங்குத்தொகை 40,000 ரூபாய் என்ற விகிதத்தில் மாவட்ட மேலாளர், தாட்கோ, அரியலூர் என்கிற முகவரிக்கு வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். 2017 - 2022ஆம் ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலளாரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொகையுடன் புதியதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், “அ” பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:விவசாயிகள் கவனத்திற்கு - இடைத்தரகர் இன்றி அறுவடை இயந்திரங்கள்... உழவன் செயலியில் உள்ள முக்கிய அம்சம்