புத்தாண்டு தினத்தை கருப்பு தினமாக அனுசரித்த முன்னாள் ராணுவ வீரர்கள் அரியலூர்:ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.01) நாடு முழுவதும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் மக்கள் பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் கோயில்களுக்குச் சென்றும் தங்களது புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், அரியலூர் மாவட்டத்தில் முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில், மத்திய அரசைக் கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள், 2024 புத்தாண்டு தினமான இன்றைய தினத்தை (ஜன.01) கருப்பு தினமாக கடைப்பிடிப்பதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், ராணுவத்தில் பணியாற்றி உடல் உறுப்புகளை இழந்து பணியாற்ற இயலாத சூழ்நிலையில், பணியில் இருந்து வெளியில் வருபவர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளைக் குறைத்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், மிலிட்டரி சர்வீஸ் பே எனும் MSP-யை அனைத்து பதவியினருக்கும் சமமாக வழங்க வேண்டும் எனவும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதனை வெளிப்படுத்தும் விதமாக இந்த 2024 புத்தாண்டு நாளை கருப்பு தினமாக அனுசரிப்பதாகவும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வருபவர்களுக்கு ஆதரவு தெரிவிபதகவும் குறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி மதியம் நடைபெறும் என்று அறிவிப்பு..!