நேற்றைய (அக்.20) தினம் மதிமுக மாநில தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ அறிவிக்கப்பட்ட நிலையில் அக்கட்சியில் இருந்து இன்று (அக்.21) ஈஸ்வரன் விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கடந்த 28 ஆண்டுகளாக என் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் பணியாற்றி வந்தேன். கட்சி இட்ட கட்டளைகளை செவ்வனே நிறைவேற்றி உள்ளேன். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அறப்போராட்டத்தின் வாயிலாகவும் சட்டப்போராட்டத்தின் வாயிலாகவும் தொடர்ந்து போராடிவருகிறேன்.
கட்சியில் பொறியாளர் அணி அமைப்பாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், இளைஞர் அணி செயலாளர் என்று பல பொறுப்புகளில் மிகச்சிறந்த முறையில் பணியாற்றி வந்துள்ளேன். பெருந்துறை இடைத்தேர்தல் முதல் கடைசியாக பல்லடம் சட்டப்பேரவை தேர்தல்வரை அனைத்து தேர்தல்களிலும் மிகச்சிறப்பாக பணியாற்றி உள்ளேன்.
தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக எனது சட்டப்போராட்டத்தின் மூலமாக கோவையில் 10,000 மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இது தான் நான் செய்த மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன். வெள்ளளூர் குப்பைகிடங்கு வழக்கின் மூலம் சுமார் 200 கோடி அளவிற்கு கோவையின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு நிதி ஒதுக்க செய்துள்ளேன்.
கேரளாவில் இருந்துவரும் கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் வராமல் தடுக்க பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். மேற்குதொடர்ச்சிமலையை பாதுகாக்கவும், கோயம்புத்தூரின் நதிநீர் திட்ட மேம்பாட்டிற்க்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.
ஏழை, எளிய மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்காக எண்ணற்ற போராட்டங்களை செய்துள்ளேன். மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த மைதானங்கள் தேவை என்பதற்காக சைக்கிள் பயணப்போராட்டங்களையும் செய்துள்ளேன்.
மெட்ரோ இரயில் திட்டம், அகல ரயில்பாதை திட்டம், சாலைவிரிவாக்கத்திட்டம் என கோயம்புத்தூரின் அனைத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி உள்ளேன். மதுவிலக்கு மராத்தான் போட்டிகளை நடத்தி ஒரு லட்சம் மாணவர்களுக்கும் மேலாக கலந்துகொள்ள வைத்ததில் எனக்கும் பெரும்பங்கு உண்டு.
இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் இயக்க தோழர்கள் எனக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பை தந்ததால் தான் என்னால் சாதிக்க முடிந்தது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. எனது பொதுவாழ்வின் மூலம் கிடைத்த அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி கடுகளவு கூட நான் பலன் அடைந்ததில்லை. அரசியலை எனது சுய லாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்பதை என் கொள்கையாகவே வைத்துள்ளேன்.