அரியலூர்:பசுங்கன்றுகள், கோழிகள் வளர்க்கும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு உரிய தடுப்பூசிகளை செலுத்த ஆவண செய்ய வேண்டும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணா சரஸ்வதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், '' ‘புரூசெல்லோசிஸ்’ என்பது பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்படுத்தும் நோயாகும். இது ‘புரூசெல்லா அபார்டஸ்’ என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் தீவிர காய்ச்சலும், சினை ஈன்றும் தருவாயில் (5 முதல் 8 மாத கால கர்ப்ப பருவத்தில்) கருச்சிதைவும் ஏற்படுகிறது. இந்த நோயினால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவினால் பொருளாதார இழப்பு ஆகியவை ஏற்படுகிறது.
இந்நோய் வாய்ப்பட்ட மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கையாளும் பட்சத்தில் மனிதர்களுக்கும் இந்த நோய் தீவிர தாக்கத்தினை ஏற்படுத்தும். தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் மூலமாக முதன்முறையாக, புரூசெல்லோசிஸ் எனப்படும் கருச்சிதைவு நோய்க்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் வருகிற பிப்.28ஆம் தேதி வரை செலுத்தப்படவுள்ளது. இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்திக் கொண்டால் அந்த கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதற்குமான நோய் எதிர்ப்புச்சக்தி கிடைக்கப்பெறும்.