அரியலூர்:தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், சோழமாதேவி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பேசியதாவது, “தமிழக அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மக்கள் தொடர்பு முகாமில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்களும் தொலை தூரத்தில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று தீர்வு கண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதே முகாமின் நோக்கமாகும்.
அதனடிப்படையில் இன்றைய தினம் தா.பழூர் ஒன்றியம், சோழமாதேவி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 269 மனுக்கள் பெறப்பட்டு, 213 மனுக்கள் ஏற்கப்பட்டும், 55 மனுக்கள் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டும், 1 மனு விசாரணையில் உள்ளது. இன்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் 129 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
மேலும் இம்முகாமில், 221 பயனாளிகளுக்கு ரூ.72,81,130 மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இம்முகாமில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அனைத்துத் துறை மாவட்ட நிலையிலான அலுவலர்கள் தங்களது துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள், அதனை பெறும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர், பெண்களின் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பெண்கள் உயர் கல்வி கற்பதற்கு ஏற்கனவே புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்கள். இதன் தொடர்ச்சியாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பெண்களின் முன்னேற்றத்திற்கும், பெண்களின் வளர்ச்சிக்கும் முக்கியமான திட்டமாகும்.