தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சந்தைக்கடையாக மாறிய அரியலூர் கிராம சபை கூட்டம் - அரியலூர் கிராம சபை கூட்டம்

தொழிற்சங்க நிர்வாகி ஒருவரும் பொதுமக்களும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டதால் அரியலூர் மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டம் மீன் மார்க்கெட்டை விட மோசமான நிலைக்கு சென்றது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jan 26, 2023, 11:05 PM IST

சந்தைக்கடையாக மாறிய அரியலூர் கிராம சபை கூட்டம்

அரியலூர்:குடியரசு தின விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டங்களை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனடிப்படையில் இன்று காலை கிராம சபா கூட்டங்கள் நடைபெற்றன.

இதில் கிராம மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய, அடிப்படை வசதிகள், குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள், குறித்தும் விவாதங்கள் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டதால், கிராம சபா கூட்டமே சந்தை கடை நிலைக்கு சென்றது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் கதிர்வேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்கள், அரசு துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த விவசாய சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதி அசோகன் என்பவர், தா.பழூர் பகுதியில் உள்ள எமன் ஏரி என்ற பெரிய ஏரிக்கு நீர்வரத்து வாய்க்கால் இல்லாதது குறித்து பேசத் தொடங்கினார். அப்போது அதே இடத்தில் அமர்ந்திருந்த தொழிற்சங்க பிரமுகரான மருதமுத்து என்பவர், தான் சில கருத்துக்களை கூற விரும்புவதாக தெரிவித்து, எழுந்து நின்று அனைவருக்கும் வணக்கம் என்று தெரிவித்து விட்டு, இந்த கிராம பஞ்சாயத்தில் அரசு திட்ட பணிகள் எதுவுமே நடைபெறவில்லை.

வந்த நிதி எல்லாம் எங்கே போச்சு என்று ஆவேசமாக குரல் கொடுத்தார். இதைக் கேட்ட கூட்டத்திலிருந்து அசோகன், சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் ஒரே நேரத்தில் எழுந்து, ‘நீயே ஒரு பெட்டிஷன் பேர்வழி, மற்றவர்களைப் பற்றி மொட்டை பெட்டிசன் எழுதுவது தான் உனக்கு வேலை.

அப்படி இருக்கும்போது வேலை நடந்து இருக்கிறதா இல்லையா என்று பேச நீ யார்’ என்று மருதமுத்துவிடம் தகராறில் ஈடுபட்டனர். இதைக் கேட்ட மருதமுத்து, கிராமசபா கூட்டத்தில் பேச பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. நான் பேசுவேன் என்று திரும்பவும் சத்தமாக குரல் கொடுத்தார். இதை கேட்ட எதிர் தரப்பினர், மருதமுத்துவுக்கு கவுண்டர் கொடுக்கும் வகையில் பேச தொடங்கினர்.

வேலை நடக்கவில்லை என்றால் எந்த வேலை என்று சொல்ல வேண்டும். குத்து மதிப்பாக சொல்லக்கூடாது. நடைபெற்ற வேலை குறித்த விவரங்களைக் கேட்டு வாங்கி தெரிந்துகொள்ள வேண்டும். அதை விடுத்து விட்டு கிராம சபை கூட்டத்தில் அமைதியை குறைக்கும் வகையில் பேசக்கூடாது என்று சகட்டுமேனிக்கு எகிற ஆரம்பித்தனர்.

இதில் வெறுத்துப்போன மருதமுத்து, பஞ்சாயத்து தலைவர் அடியாள் வைத்துக்கொண்டு கிராமசபை கூட்டத்தை நடத்துகிறாரா,
நீ என்ன அவருக்கு அடியாளா என்று சக்கரவர்த்தி என்பவரிடம் கேட்டார். இதைக் கேட்ட சக்கரவர்த்தி யாரைப் பார்த்து அடியாள் என்று கூறுகிறாய் என்று மருதமுத்துடன் மல்லுக்கு நின்றார்.

இந்த வாக்குவாதம் பெரும் சத்தத்தோடு நடந்த நிலையில் பொதுமக்களில் பலர் எழுந்து நின்று குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
இதனால் அந்த இடமே சந்தைக்கடையாக மாறியது. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன மருதமுத்து இந்த கூட்டம் நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கவில்லை நான் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்கிறேன் என்று கூறிவிட்டு ஆவேசமாக வெளியே புறப்பட்டுச் சென்றார்.

அவர் வெளியேறிய போதும் அவரை சிலர் கூட்டத்தில் வறுத்தெடுத்தபடியே இருந்தனர். நிலைமை சீரியஸாக மாறுவதைக் கண்ட ஊராட்சித் தலைவர் கதிர்வேல் அனைவருக்கும் டீ, வடை கொடுக்குமாறு பணியாளர்களைக் கேட்டுக் கொண்டார். எல்லோருக்கும் டீ வடை வழங்கப்பட்டதோடு கூட்டம் நிறைவு பெற்றது. இந்த களேபரங்களால் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் என்ன? என்ன பொருள் குறித்து விவாதிக்க போகிறோம்? போன்ற கருப்பொருள்கள் மறைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் என் பச்சை பேனா வேலை செய்யும் - எம்.பி. கதிர் ஆனந்த் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details