அரியலூர்:மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 13) தொடங்கி ஏப்ரல் 4 வரை நடைபெறுகிறது. இந்த பொதுத்தேர்வை 4 லட்சத்து 10 ஆயிரத்து 138 மாணவர்களும், 4 லட்சத்து 41 ஆயிரத்து 164 மாணவிகளும், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் 23 ஆயிரத்து 747 தனித்தேர்வர்கள் என மொத்தமாக 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர்.
இதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்த்து 3 ஆயிரத்து 225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 46 ஆயிரத்து 870 தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களும், 4 ஆயிரத்து 235 பறக்கும் படை மற்றும் நிலையான படை உள்பட 4 படைகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் பொதுத் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 90 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 9,152 மாணவ, மாணவிகள் 44 தேர்வு மையங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
இந்த நிலையில் இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற்றது. இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவிகள் கூறுகையில், “தமிழ் தாள் எளிமையாக இருந்தது. சில கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்தது. ஆனால், சில பகுதிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்தது” என தெரிவித்தனர்.