சேலம்: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் தொடர் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தொடரில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை குவித்து, பதக்கப்பட்டியலில் 24ஆவது இடத்தை பிடித்தது.
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். கடந்த 2016ஆம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்ற அவர், டோக்கியோவில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம் வந்த மாரியப்பன்
இதையடுத்து, டோக்கியோவில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மாரியப்பன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், நேற்று (செப். 12) மாலை சொந்த ஊரான பெரியவடகம்பட்டிக்கு வந்தார்.
அப்போது அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் காடையாம்பட்டி அருகேவுள்ள தீவட்டிப்பட்டி எல்லையில் இருந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். தீவட்டிப்பட்டியிலிருந்து மேளதாளம் முழங்க, அலங்கரிக்கப்பட்ட வேனில் மாரியப்பனை ஏற்றி சிறப்பான வரவேற்பை அளித்தனர்.