சண்டிகர்:டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்திய மகளிரணியின் இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது.
இந்த பெரும் வெற்றியை இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை மோனிகா மாலிக்கின் குடும்பத்தாரைப் பாராட்ட உள்ளூர்ப் பொதுமக்கள், அவரின் இல்லத்தின் முன்திரண்டு பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகிழ்ச்சியில் திளைக்கிறோம்
இந்த வெற்றி குறித்து மோனிகாவின் மூத்த சகோதரர் ஆஷிக் மாலிக் கூறுகையில்,"ஒட்டுமொத்த குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறோம்.
எனது தங்கையின் சாதனை அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இந்திய மகளிர் ஹாக்கி அணி தங்கப்பதக்கத்துடன் நாடு திரும்பும் என நம்புகிறோம்" என்றார்.
மல்யுத்தம் - ஹாக்கி
சண்டிகரைச் சேர்ந்த மோனிகா மாலிக், சிறுவயதில் இருந்தே ஹாக்கியில் நாட்டம் கொண்டு, நாட்டுக்கு பதக்கம் வென்றுத்தர வேண்டும் என்ற கனவோடு வளர்ந்தவர்.
அவர் கனவு நிறைவேற இன்னும் சில அடிகள் இருக்கிறது. மோனிகா மாலிக் கடந்த ரியோ ஒலிம்பிக் தொடரிலும் பங்கேற்றிருந்தார். தேசிய அணிக்கு விளையாடுவதற்கு முன், பள்ளிப்பருவத்தில் அவர் சண்டிகர் அணிக்காக விளையாடியுள்ளார்.
மோனிகாவின் தந்தை தக்தீர் சிங், மோனிகாவை மல்யுத்த வீராங்கனையாக கொண்டுவர வேண்டும் என்று நினைத்துள்ளார். ஆனால், மோனிகாவிற்கு ஹாக்கிமேல் விருப்பம் என்பதால், அவரின் தந்தை மோனிகாவின் ஆசைக்கு இணங்கி ஹாக்கி மட்டையைக் கையில் கொடுத்து அனுப்பியுள்ளார்.