டோக்கியோ: மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதன்மூலம், பாரா டேபிள் டென்னிஸில் இந்தியா தனது முதல் பதக்கத்தை உறுதிசெய்துள்ளது.
முடியாதது என்று ஒன்றுமில்லை
நாளை (ஆக. 29) நடைபெறும் இறுதிப்போட்டியில் சீனா வீராங்கனை யிங் ஜோவை வென்று, பவினாபென் தங்கம் வெல்லும்பட்சத்தில், ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெறுவார்.
இன்றைய அரையிறுதிப் போட்டிக்கு பிறகு, பவினாபென் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறிய அவர், "நான் என்னை ஒருபோதும் ஊனமுற்றவர் என்று நினைத்து இல்லை. என்னால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு.
நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் கிடையாது என்பது இன்று நிரூபணமாகிவிட்டது. பாரா டேபிள் டென்னிஸ், மற்ற விளையாட்டுகளைவிட தற்போது முன்னிலையில் உள்ளது. சீன வீராங்கனைக்கு எதிராக கடுமையாக போராடினேன்.
அவர்களை வெல்வது அவ்வளவு எளிதானது அல்ல. இன்று, சீனாவை வீழ்த்தி, ஒருவரால் முடியாதது என்று ஒன்றுமில்லை என மீண்டும் ஒருமுறை நான் நிரூபித்துவிட்டேன்.
பொதுவாக, அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடுவேன். யோகா, தியானம் மூலம் கட்டுப்பாடுடன் இருந்து மனதை ஒருமுகப்படுத்துகிறேன். போட்டியின் போது அவசரத்தில் சில தவறுகளை செய்து புள்ளிகளை இழந்துவிடுவோம். ஆனால், இன்று நான் அவசரப்படாமல் நிதானமாக இருந்தேன். என்னுடைய வெற்றியில் எனது பயிற்சியாளர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது.
எனக்கு துணையாக நின்றவர்கள்
நடுத்தர குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு பணம் பெரிய தடையாக இருக்கும். தொடர்களில் பங்கேற்கும் செலவுகள் குறித்த எண்ணங்கள் ஒரு வீரரை அடுத்த கட்டத்திற்கு முன்னேறவிட முடக்கும்.
அந்த வகையில், எனது குடும்பம், இந்திய விளையாட்டு ஆணையம் (SAI), டார்கட் ஒலிம்பிக் போடியம் திட்டம் (TOPS), இந்திய மருந்துக் கவுன்சில் (PCI), பார்வையற்றோர் நலச்சங்கம் போன்றவை எனக்கு மிகப்பெரும் உதவிகளைச் செய்து எனக்கு துணையாக இருந்துள்ளனர்" என்றார்.
இதுவரை பவினாபென் படேல், ஜாங் மியாவோ உடன் 11 முறை மோதி இருக்கிறார். பவினாபென் முதல் முறையாக ஜாங் மியோவோவை வீழ்த்தியுள்ளார்.
மியாவோ, கடந்த 2016 ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். 34 வயதான பவினாபென், தனது 12ஆவது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.