தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கூகுள்தான் எனது முதல் பயிற்சியாளர் - வெள்ளி வென்ற பிரவீன் - டோக்கியோ பாரா ஒலிம்பிக்

தான் முதன்முதலில் உயரம் தாண்டுதல் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டபோது தனக்குப் பயிற்சியாளர் என்று யாருமில்லை என்றும், கூகுளில் காணொலி பார்த்துதான் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டேன் என உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

பிரவீன் குமார், Paralympics silver medallist Praveen Kumar, high jump silver medalist Praveen Kumar
பிரவீன் குமார்

By

Published : Sep 3, 2021, 5:00 PM IST

டோக்கியோ பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர்கள் இதுவரை 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றுள்ளனர். குறிப்பாக, துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா வெவ்வேறு பிரிவுகளில் பங்கேற்று தங்கம், வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

குவியும் பதக்கங்கள்

அதேபோல், ஈட்டி எறிதல் எஃப்-46 பிரிவில் தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலம் என இரண்டு பதக்கங்களையும், உயரம் தாண்டுதல் டி-63 பிரிவில் மாரியப்பன் தங்கவேலு (தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்), சரத் குமார் ஆகியோர் வெள்ளி, வெண்கலம் என இரண்டு பதக்கங்களையும் வென்றிருந்தனர்.

இதையடுத்து, உயரம் தாண்டுதல் டி-64 பிரிவின் இறுதிப்போட்டி இன்று (செப். 3) நடைபெற்றது. இப்போட்டியில், இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளி வென்றார். இதன்மூலம், அவர் இத்தொடரில் இந்தியாவுக்கு உயரம் தாண்டுதலில் மூன்றாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.

கைப்பந்து - உயரம் தாண்டுதல்

பதக்கம் வென்றதற்குப் பிறகு, இந்திய பாரா ஒலிம்பிக்கு குழு (IPC) ஏற்பாடு செய்திருந்த செய்தியாளரைச் சந்திப்பில் பிரவீன் குமார் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "முதலில் நான் கைப்பந்து (Volleyball) விளையாட்டுகளில்தான் பங்கேற்கவந்தேன். 2016ஆம் ஆண்டிற்குப் பிறகே, உயரம் தாண்டுதலை விளையாட ஆரம்பித்தேன்.

முதலில், நான் தொடர்களில் பங்கேற்றபோது எனக்குப் பயிற்சியாளர் என்று யாருமில்லை. ஒரு மாவட்ட அளவிலான போட்டியின்போது, பயிற்சியாளர் டாக்டர் சத்யபாலை பற்றி கேள்விப்பட்டேன்.

2018இல் அவரைச் சந்தித்தேன். அவர் எனது மாற்றுத்திறன் வகைப்பாட்டினைச் சோதித்துப் பார்த்து, பின்னர் எனக்குப் பயிற்சியளிக்க ஒத்துக்கொண்டார். எனது பள்ளிப்பருவத்தில் இருந்தே விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறேன்.

முதலில் தடுமாற்றம்

அப்போது, எனது சக வகுப்பினர்கள் என்னை ஆதரவளிக்கவில்லை என்றாலும், உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர்" எனத் தனது ஆரம்பக் கால விளையாட்டு வாழ்க்கை குறிப்பிட்டார்.

பின்னர், டோக்கியோவில் வெள்ளி வென்ற அனுபவத்தைக் குறித்து கேள்வியெழுப்பியபோது, "முதலில், உயரத்தை 1.97 மீட்டருக்கு பார் (Bar) வைக்கப்பட்டபோது எனது நம்பிக்கை சற்று குறைந்திருந்தது. அதனால், முதல் முயற்சியைத் தவறவிட, அடுத்து என்னால் தாண்ட முடியுமா என எனக்குள்ளேயே சந்தேகம் எழ ஆரம்பித்தது.

ஆனால், அடுத்த வாய்ப்பிலேயே 1.97 மீ உயரத்தைத் தாண்டிவிட்டேன். அதையடுத்து, 2.01 மீ உயரம் நிர்ணயித்த பிறகு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இதனால், அடுத்தடுத்த இரண்டு வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்தினேன். மழை பெய்து பற்றியோ, மற்ற போட்டியாளர்கள் பற்றியோ எந்தச் சிந்தனைக்கும் நான் செல்லவில்லை. ஒரே இலக்கு அந்த 2.07 மீ உயரத்தை கடப்பதுதான் என்பதில் கவனமாக இருந்தேன்" என்றார்.

தகர்ந்தது ஆசிய சாதனை

அவர், 2.07 மீ உயரத்தைத் தாண்டி ஆசிய சாதனையைத் தகர்த்தார். ஆனால், அவரால் 2.10 மீ உயரத்தைத் தாண்ட முடியாததால் பிரவீன் வெள்ளியோடு வெளியேறினார். இங்கிலாந்தின் ஜோனதன் ப்ரூம்-எட்வார்ட்ஸ் 2.10 மீ உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தங்கப் பதக்கம் வெல்ல முடியாதது குறித்து பிரவீன் கூறியதாவது, "2.10 மீ உயரத்திற்கான முதல் வாய்ப்பின்போதும் சிறு நெருக்கடி இருந்தது. அந்த வாய்ப்பையும் தவறவிட்டேன். அடுத்த இரு வாய்ப்புகளிலும் கடினமாக முயன்றும் என்னால் பாரை தாண்ட முடியவில்லை. ஏனென்றால், எனது லேண்டிங் (Landing) சரியாக வரவில்லை" என வருத்தம் தெரிவித்தார்.

18 வயதான பிரவீன் குமார், டெல்லி மாநிலத்தின் கோட்லா முபாரக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு, பிறப்பின்போதே ஒரு கால் சிறிதாக இருந்த காரணத்தால், இடதுகாலையும் இடுப்பையும் இணைக்கும் எலும்பில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கிங் கோலியின் புதிய சாதனை; நிற்காது இந்த ரன் மெஷின்

ABOUT THE AUTHOR

...view details