டெல்லி:2020 டோக்கியோ கோடைக்கால ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெற்றது. இத்தொடரில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்று ஏழு பதக்கங்களை வென்றனர். நீரஜ் சோப்ரா தடகளப் பிரிவான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று சிறப்பித்தார்.
சம்மர் ஒலிம்பிக் முன்னதாக நிறைவடைந்த நிலையில் அடுத்து, மாற்றுத் திறனாளிக்கள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்தத் தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் ஒன்பது விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று நடைபெறும் தொடக்க விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தேசியக்கொடியை ஏந்திச் செல்வார்.
இந்த முறை இந்திய அணி...
கடந்த ரியோ பாரா ஒலிம்பிக் தொடரில், இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என நான்கு பதக்கங்களை வென்றது. இதில், உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த தொடரை விட மூன்று மடங்கு அதிகமான வீரர்களை இந்த முறை இந்தியா அனுப்ப உள்ளதால், பதக்கமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த முறை, பேட்மிண்டன் போட்டியும் பாரா ஒலிம்பிக் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து ஏழு வீரர்கள் அப்போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இந்தியாவுக்கு 2004, 2016 பாரா ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ள தேவேந்திர ஜஜாரியா, மூன்றாவது முறையாக தங்கம் வெல்லும் ஆவலில் உள்ளார். அதே ஈட்டி எறிதலில் உலக சாம்பியனான சந்தீப் சௌத்ரி, கடந்த முறை தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு ஆகியோரும் இந்த முறை தங்கப் பதக்க வேட்டையில் ஈடுபட வாய்ப்புள்ளது.